மறந்தே போச்சு..... ரொம்ப நாள் ஆச்சு

தமிழ் தட்டச்சு டச் விட்டுப் போகக்கூடாதுங்கறதுக்காக அவசரமா அவசியமா இந்தப் பதிவு.

எழுதணும்னு நினைச்சு, மனசின் ஓரத்திலே போட்டு வெச்ச விஷயங்களின் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.. எழுதியிருக்க வேண்டிய பதிவுகள் அனைத்தையும் , சுருக்கமா ஒரே பதிவிலே இங்கே எழுதறேன். ....

1. மரவண்டு கணேஷ் நடத்தின போட்டியிலே புத்தகப் பரிசு பெற்ற கார்த்திக் ராமாஸ், தன்னுடைய சார்பா, என்னை அந்தப் புத்தகம் வாங்கிக்கச் சொன்னார். நானும் ரொம்ப பிகு செய்யாம வாங்கிகிட்டேன். காரணம், அது பிரமிள் எழுதின கட்டுரைத் தொகுதி. இதுக்கு முன்னாடி பிரமிள் எழுதின புத்தகம் ஏதும் படிச்சதில்லை. இதை படிச்சு முடிச்சதும், சும்மா அப்படியே உருவி விட்ட மாதிரி ஆயிடுச்சு. புதிய சொல்லாடல்களால், மொழி நடையால் என்னை அதிகம் ஈர்த்தவர் காலம் சென்ற சு.ரா. பிரமிளும் அதே வரிசையில் , குறைந்த பட்சம் என்னளவில், வருகிறார். வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில 'strictly-for-private-circulation' எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு வந்தார்கள் என்று நிதர்சனமாகத் தெரிகிறது. இன்னும் பிரமிளின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கிப் படிக்க இருக்கிறேன்.

'நாம்கே வாஸ்தே' ஆக அல்லாமல் மனப்பூர்வமாகச் சொல்கிறேன். கணேஷ், கார்த்திக், ரொம்ப நன்றி.

2. ஒரு மாத காலமாக குவிந்து விட்ட வலைப்பதிவுகளில் இருந்து, தமிழ்மணம் சர்ச்சை தொடர்பான பதிவுகளைத் தேடிப் படிப்பதில் சிக்கல் ஏதும் இருக்கவில்லை. அதான் தமிழ்மணம் ஆவணக்கிடங்கு இருக்கிறதே... இந்தப் விவகாரத்தில், இந்திய வாழ், குறிப்பாக தமிழ்நாடு வாழ் வலைப்பதிவாளர்கள், அந்தக்கால சரத்பாபு மாதிரி, அதாவது ரொம்பவும் ஜென்டில்மேன் தனமாக நடந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. கருத்து அல்லது மாற்றுக் கருத்து எதுவாக இருப்பினும் அதைப் பொதுவில் பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், காசி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், உள்நோக்கத்தை சந்தேகித்து எழுதிய பதிவுகள் ஆகியவற்றின் வீரியம் குறைந்திருக்கும் என்பது என் அபிப்ராயம். இது தொடர்பாக செல்வராஜ், சன்னாசி ஆகியோர் எழுதிய கருத்துக்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.

3. நேற்றைக்கு வெங்கட் சாமிநாதனை, அவரது இல்லத்தில் வைத்து, நானும் கசாகூளம் சந்தோஷ¤ம் சந்தித்தோம்.
ஏறக்குறைய அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கிற மடிப்பாக்கத்தில், அவரது வீட்டை கண்டு பிடிக்கவே நாழியாயிற்று. இறுதியில், தெருமுனையில் இருந்து அவரே வந்து அழைத்துக் கொண்டு சென்றார். நடந்தது இலக்கிய ரீதியிலான சந்திப்பு என்று நினைப்பீர்கள்... அதுதான் இல்லை. கணிணி பற்றி கற்றுக் கொடுப்பதற்காக...மேலும், விகிபீடியாவில் கொஞ்சம் உருப்படியாக வேலை செய்வதற்குத் தேவையானதகவல்கள் சேகரிக்க... கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என்னை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு, " are you from kizakku pathippakam? " என்றார். சரி எதுக்காச்சும் உபயோகப்படும் என்று நினைத்து ' ஆமா சார்.. அங்க ப்ரூ·ப் ரீடரா வேலை பாக்கறேன்.." என்று சொல்லாம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கும் கிழக்குப்பதிப்பகத்தாருக்கும் இடையிலான டேர்ம்ஸ் எப்படி என்று உத்தேசமாகக் கூடத் தெரியாது என்பதால் இல்லை சார் என்று சொன்னேன். பிறகு, ஏகப்பட்ட குப்பைகள் சேர்ந்திருந்த அவரது கணிணியை சுத்தம் செய்து, ஒருங்குறி நிறுவி, ஜிமெயிலில் நேராகவே தமிழில் அடிக்கக் கற்றுக் கொடுத்து விட்டு, அட்டகாசமான ·பில்டர் காபி சாப்பிட்டு விட்டு, கிளம்பிய போது மணி ஆறரை. பாடம் பாதியிலே நிற்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத் தொடரும். ஒரு ஆப்பிரிக்கப் படத்தைப் பற்றிச் சொன்னார். அடுத்த முறை வரும் போது போட்டுக் காமிக்கிறேன் என்று சொன்னார். நந்தா கந்தசாமி அனுப்பிய ஓவியங்கள் சிலவற்றை காண்பித்தார். அற்புதமாக இருந்தன. அடுத்த முறை செல்லும் போது, யாத்ராவில் அவர் எழுதிய கலை இலக்கிய விமர்சனங்கள், சமகால இலக்கியவாதிகளுடான அவரது உரசல்கள், அக்கிரகாரத்தில் கழுதை, சுந்தர.ராமசாமியுடன் அவரது நட்பு, நட்பின்மை, பிரமிளுடன் அவர் நடத்திய சர்ச்சைகள், காலம் விருது பெற்றபோது நடந்த சர்ச்சைகள் இவற்றைப் பற்றி எல்லாம் பேச வேண்டும்.

4.தீபாவளி ரிலீஸ் படம் ஒண்ணு கூட இன்னும் பார்க்கலை.

5. CBSE பள்ளிகளில், ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு கல்வி இலவசமாகச் அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை விட பேத்தலாக இருக்க முடியாது. பெண் குழந்தைகளின் கல்வி முக்கியமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், இந்த விதிமுறையை பின்பற்றினால், என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். பெரும்பான்மையான சிபிஎஸ்ஈ பள்ளிகள், அரசு உதவி பெறாமல், தனியார்களால் நடத்தப்படுகின்றன. அவர்கள், இலவசமாகக் கல்வி அளிக்க வேண்டுமே என்ற காரணத்தால், நட்டத்தை குறைக்க முடிவு செய்தால் என்ன நடக்கும்? படிக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையும். ஏதாவது காரணம் காட்டி பெண்களை சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள். தனியார் பள்ளிகளுக்கு tuition fees தான் முக்கியமான வருவாய். இந்த விதிமுறை அமுலுக்கு வந்தால், சிக்கலாகிவிடும் என்ற காரணத்தால், பள்ளிகளை மெட்ரிக் முறைக்கு மாற்றிக் கொள்வார்கள். இன்னும் பல சிக்கல்கள் இதனால் ஏற்படும்.

அரசுக்கு இந்த திட்டத்தை முன்மொழிந்த அதிகாரி, ஒரு கோய்ந்த்சாமியாகத்தான் இருப்பார் என்று திடமாக நம்புகிறேன்.

6. சமீபத்தில் சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்ட, ரவிஸ்ரீனிவாஸின் ஆருயிர்த் தோழர், தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லி இருக்காவிட்டால், திவாலீ என்று ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை தவற விட்டிருப்பேன். சுமார் ஐந்து மணிநேரம் கட்டிப் போட்டு விட்டது. நிகழ்ச்சியில் பாடிய. ' நான் தேடும் செவ்வந்திப் பூவிது' பாட்டுக்காக, கோடி ரூபாய் கொடுக்கலாம். என்கிட்ட அத்தனை ரூவா இருக்குதாங்கறது அடுத்த பிரச்சனை. அந்த நிகழ்ச்சியின் இறுதிப்பகுதி வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது நாளைக்கு மாலை நாலு மணிக்கு ஒளிபரப்பாகும். தவறாமப் பாருங்க...

7.ஹரிக்கேன் முனிம்மாவால், இரண்டு நாட்கள், மின்சாரம், தொலைத் தொடர்பு, பால், மெழுகுவத்தி, இந்து நாளிதழ், கோல்ட் ·ப்ளேக் கிங்க்ஸ், போன்றவை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட ஜந்துக்களில் நானும் ஒருவன். வானொலியே துணை. 1987 மழை தான் நினைவுக்கு வந்தது. நிவாரணப் பணிகள் துரிதமாக நடந்தன. ஜெயலலிதா அரசு இத்தனை விரைவாகவும், நேர்த்தியாகவும் செயல்பட்டுப் பார்த்ததில்லை. 'தேர்தல் வருதுல்லா...அதான்...' என்று டீக்கடையில் பேசிக் கொண்டார்கள். இருந்தாலும், இந்த மழை பாதிப்பை சமாளிக்க தனித்திறமை வேண்டும். அது இந்த அரசுக்கு இருந்திருக்கிறது.

8. ரெண்டாவது இன்னிங்ஸை துவக்கி இருக்கும் பசுபதிராயருக்கு வாழ்த்துக்கள்.

Comments

Vassan said…
இது மாதிரி முடிந்த போதெல்லாம் எழுதி விட்டு போங்கள்.. படிக்க நல்லாயிருக்கு..


நன்றி.

- வாசன் ( எப்போதும் தமிழ் பஞ்சத்தில்)
//ஏறக்குறைய அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கிற மடிப்பாக்கத்தில்//

ஹலோ.. என்ன நக்கலா? அமெரிக்கா போக உங்களுக்கு அவ்வளவு கஷ்டமாவா இருக்கும்?!
Venkat said…
சாமி - இந்த சிபிஎஸ்ஸி விவகாரத்துல எனக்கு தனியார் பள்ளிகள் மீது கொஞ்சமும் அனுதாபம் கிடையாது. இது அவர்களுக்குப் பொருளாதாரச் சுமை என்று சொல்வது முதலைக் கண்ணிர். என்னுடைய வலைப்பதிவில் அவர்களது சம்பளத்தில் ஆசிரியர்களை அரசாங்கப் பள்ளியில் சொல்லிக்கொடுக்கக் கூட அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

http://www.domesticatedonion.net/blog/?item=cbse

நந்தா கந்தசாமி எங்க ஊரு (டொராண்டோ) காரர் என்று வெ.சா சொன்னாரா?
Mookku Sundar said…
// வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில 'strictly-for-private-circulation' எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு வந்தார்கள் //

ஹி ஹி..பிரியுது பிரியுது :-)
ஐய்யா.. இப்படி வந்து போய்ட்டு இருங்க!

வெ.சா.: அவர் சீக்கிரம் வலைபதிவார்னு சொல்லுங்க. விக்கிபீடியா வேலைகளில் அவரும் பங்கெடுக்க இருப்பது நல்ல செய்தி.

நந்தா கந்தசாமி: ஜூன் மாதம் டொராண்டோ சென்றிருந்தபோது அவருடைய கணினியில் சேமித்து வைத்திருந்த ஓவியங்கள் பிரமிக்க வைத்தன. ப்ரொஜெக்டரில் ஓவியங்களை இட்டுக் காட்டுவதாகச் சொன்னார், அடுத்த முறை போகும்போது கட்டாயம் பார்க்க வேண்டும். தோழியர் வலைப்பதிவில் இட்ட ஓவியம் போல பல அருமையான ஓவியங்கள் அவரிடம் இருந்தன. காலம் 'பத்மநாப ஐயர்' சிறப்பிதழ் அட்டையும் அவருடையதுதான். அதே போல அ.முத்துலிங்கம் அவர்களின் புத்தகத்தின் அட்டைப்படமும்..

ஓவியம் தவிர இலக்கியத்திலும் ஈடுபாடுள்ளவர் என்று வெ.சா. சொன்னாரா? சுவாரசியமான மனிதர்! அமைதியாக, நேர்மையான கருத்துகளைக் கொண்டவர் என்பதை நண்பர்களிடையேயான ஓர் சந்திப்பில் உணர்ந்தேன்.

அவருடைய ஓவியங்களை இணையத்தில் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டேன். ஃப்ளாஷ் முறையில் பார்க்க மட்டுமே முடிகிற வகையில் பகிர இருப்பதாகச் சொன்னார். ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள். கேட்க வேண்டும்.

அப்பப்ப எழுதுங்கய்யா. எழுதுங்க.

-மதி
//ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை தவற விட்டிருப்பேன். சுமார் ஐந்து மணிநேரம் கட்டிப் போட்டு விட்டது//
பொறுமையின் பூஷணமே! பத்து நிமிஷம் விளம்பரங்கள், அடுத்து பார்த்திபனின் அறுவை, அடுத்து ஒரு பிரபலம் இளையராஜாவை ஞானி, தெய்வம் என்று போற்றி பேசுதல், இ.ஞானி அதற்கு நான் அருங்கதையில்லை என்று நாணத்துடன் மறுத்தல், அடுத்து ஓரு பாட்டு, பிறகு வரப் போகும் பாடல்களுக்கு டிரெய்லர். எப்படிங்க ஐந்து மணிநேரம் தொடர்ந்து பார்த்தீங்க?
சிபிஎஸ்சி பெண் கல்வி விதயம் குறித்து வலைப்பதிவுகளில் விவாதிப்பது நல்ல விதயம். மும்பை சுதாகர் பதிவில் எழுதி இருந்தார். நம்ம ஜெயஸ்ரீ தூண்டுதலில். யாரும் அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த அறிவிப்பினால் விளையும் நன்மை தீமைகளை அறிய ஆவல். நுனிப்புல் மேய்ந்து பார்க்கும்போது, நன்மையை விடத் தீமையே அதிகம் இருப்பதுபோலத் தெரிகிறது. பெண்பிள்ளைகளைப் பெரிதாக சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்க்காமல் போய்விடுவார்களே, நம்மவர்கள்.

-மதி
உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா பிரகாஷ் அவர்களே. எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானும் உங்களுடன் வெசா அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பேன் அல்லவா.

எது எப்படியோ, அவருக்கு தமிழ் தட்டச்சு எனேப்ள் செய்ததற்கு மகிழ்ச்சி.

மதி அவர்களே, வெசாவின் டெம்ப்ளேட்டில் தமிழ்மணதுடனானத் தொடர்புக்கான மீயுரையை ஏற்றியிருந்தேன். கூடிய சீக்கிரம் அவருடைய லிங்கை செயலாக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்
ராஜா அடுத்த ஞாயிறும் தொடர்வார் என்று தெரிகிறது.
thala,

//இந்தப் விவகாரத்தில், இந்திய வாழ், குறிப்பாக தமிழ்நாடு வாழ் வலைப்பதிவாளர்கள், அந்தக்கால சரத்பாபு மாதிரி, அதாவது ரொம்பவும் ஜென்டில்மேன் தனமாக நடந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. கருத்து அல்லது மாற்றுக் கருத்து எதுவாக இருப்பினும் அதைப் பொதுவில் பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், காசி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், உள்நோக்கத்தை சந்தேகித்து எழுதிய பதிவுகள் ஆகியவற்றின் வீரியம் குறைந்திருக்கும் என்பது என் அபிப்ராயம்
//
I did a posting :-(
http://balaji_ammu.blogspot.com/2005/10/blog-post_22.html

DO visit my blog once in a while, boss ;-)

//சும்மா அப்படியே உருவி விட்ட மாதிரி ஆயிடுச்சு.
//
sujatha ????

//"மறந்தே போச்சு..... ரொம்ப நாள் ஆச்சு"
//
Nostalgia !!! Great song by SPB !!!

enRenRum anbudan
BALA
Shankar said…
Birathar, amberikka poradhu nemba eeji. madippaakkam poRathukkuLLa pirinjirum. enna kamperisan idhu?!

hurricane munimma!!! lol :)))
வாசன், சுந்தர் நன்றி
மாயவரத்தான் : என்ன சார் ஆளையே காணும்... அமெரிக்கா மடிப்பாக்கம் பெரச்சனையை விடுங்க... "The Boss" என்ன சொல்றார்? :-) ஏப்ரல் பதினாலா இல்லை தீபாவளிதானா?
வெங்கட் : ஒங்க பதிவுல பதில் எழுதியிருக்கேன். நந்தா கந்தசாமி ஒங்க ஊருன்னு எனக்கு ஏற்கனவே தெரியுமே?
மதி : நந்தா கந்தசாமியுடையை எழுபத்து ஐந்து ஓவியங்களையும் கனிணியில் தான் பார்த்தேன். அப்படியே ஆடிப் போய்விட்டேன். அபாரம். கிளம்புகிற சம்யம் என்பதால், நந்தா பற்றி அதிகமாகப் பேச முடியவில்லை. அடுத்த முறை...
உஷா : கொக்குக்கு மீனு ஒண்ணே மதி :-)... பெருசு எத்தனை நாள் கழிச்சு மேடையேறுது... நடுவுல கொஞ்சம் வெளம்பரம் வந்தாதான் என்னவாம் ?...
டோண்டு சார் : உங்களுக்கு ·போன்லயே பதில் சொல்லிட்டேன் :-)
பாலாஜி : அய்யோ சாரே.. கவனிக்காம விட்டுப் போச்சு... சரி எப்ப மறுபடியும் போட்டி ஆரம்பிக்கப் போறீங்க?
ஷங்கர் : அட வா... ராசா பேரிக்கா எப்டி கீது...? வெலாவரி தர்ரது?
தலீவா... 'பாஸ்' எப்ப வருவாரு அப்படீன்னு தெரில. ஆனா ஒண்ணு மட்டும் தெரிது... வர வேண்டிய நேரத்துக்கு கரீக்க்ட்டா வந்திடுவாரு பாருங்க!

'மடிப்பாக்கம் போவது எப்படி?!' அப்படீன்னு நம்ம சுவடு சங்கர் அண்ணாச்சி அடுத்த பொஸ்தகம் எளுதிட வேண்டியது தான்!
Boston Bala said…
---அந்தக்கால சரத்பாபு மாதிரி---

நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் மாதிரியா ;;-P
ஈஸ்வர் : ரொம்ப சுலபமாச்சே...நீங்க win xp பாவிக்கறவரா இருந்து எ- கலப்பையை நிறுவியிருந்தீங்கன்னா, ஜிமெயிலில், நேராகவே தமிழில் தட்டச்சு செய்யலாம்.
balaji,

//நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் மாதிரியா ;;-P //

நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் ரெண்டு படத்திலேயும், சரத்பாபு நெகடிவ் கேரக்டர் :-)

வேணும்னா, நெஞ்சத்தைக் கிள்ளாதே, வட்டத்துக்குள் சதுரம், மெட்டி, 47 நாட்கள், முள்ளும் மலரும் இப்படி வெச்சுக்கலாம்.
Santhosh Guru said…
// பிறகு, ஏகப்பட்ட குப்பைகள் சேர்ந்திருந்த அவரது கணிணியை சுத்தம் செய்து, ஒருங்குறி நிறுவி, ஜிமெயிலில் நேராகவே தமிழில் அடிக்கக் கற்றுக் கொடுத்து விட்டு, அட்டகாசமான ·பில்டர் காபி சாப்பிட்டு விட்டு, கிளம்பிய போது மணி ஆறரை. பாடம் பாதியிலே நிற்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத் தொடரும். ஒரு ஆப்பிரிக்கப் படத்தைப் பற்றிச் சொன்னார். அடுத்த முறை வரும் போது போட்டுக் காமிக்கிறேன் என்று சொன்னார். நந்தா கந்தசாமி அனுப்பிய ஓவியங்கள் சிலவற்றை காண்பித்தார். //

அதுமட்டுமா, அப்புறம் ஞானக்கூத்தன், தமிழவன் பற்றியும் நீங்கள் "ரிலாக்ஸ்" பண்ணவெளியே போயிருந்த போது, ரீடிஃப்ல் ஏதோ ஜாண்டி ரோட்ஸ் பத்தி செய்தி வந்திருந்தது, அதைப்பார்த்துட்டு வெ.சா ஜாண்டியோட ரசிகர் என்றும், அவர் ரிடையர் ஆனபோது "I felt a lump in my throat"ன்னும் சொன்னார். இன்னும் நிறையா அவர்கிட்ட பேசணும். :).

அது சரி எல்லாத்தையும் சொல்லிட்டு இந்த ஷான் ராயல பத்தி ஒன்னும் எழுதலயே நீங்க :)).
Santhosh , சும்மாச் சொல்லப்படாது ஷான் ராயல் , ஷான் ராயல் தான்.. இதுக்கு மேல வெலாவரியா எழுத முடியாது :-)
If he has all the back issues of Yatra have a look. There are some articles (not necessarily by Venkat Swaminathan) that need to be published again (atleast in the web).
first time i come to this blog...nalla irukku pirakash..

ungalaipatri kaelvippattean..neengal thagaval mannaname..paarattukkal

- Rasikow Gnaniyar

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்