கோ.கு.ப.பட்டறை - இறுதிப்பகுதி

இரண்டாம் நாள், இயக்குனர் அருண்மொழி அவர்கள் காமிரா குறித்த அடிப்படை விஷயங்கள் பற்றி பாடம் நடத்தினார்.அருண்மொழி சென்னைத் திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவாளராக பயிற்சி பெற்றவர். காணிநிலம், ஏர்முனை என்று இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

அருண்மொழியின் விளக்கங்கள் மிகத் தெளிவாக இருந்தது. திரையிலே சில காட்சிகளை காண்பித்து நேரடியாக விளக்கம் அளித்தார். புரிந்து கொள்ளச் சிரமமாக இருந்த விஷயங்களை, அவரே படம் பிடித்து அப்போதே திரையில் போட்டுக் காட்டி விளக்கினார். மேடையிலே நின்று கொண்டு மட்டுமே உரை நிகழ்த்தாமல், அங்கங்கே மாணவர்களிடம் வந்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். காமிரா கோணங்கள் பற்றி நன்றாகப் புரிந்த மாதிரி இருந்தது. பிறகு கேள்வி நேரம்.



மதிய உணவுக்குப் பின், குழுவுக்கு ஒரு காமிராவைக் கொடுத்து அனுப்பி வைக்க, நாங்கள் எங்கள் குழுவினர் என்ன எடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் இறங்கினோம். முதலிலே குறும்படம் எடுக்கலாமா அல்லது ஏதாவது ஒரு ஆவணப்படம் எடுக்கலாமா என்று சிந்தித்து, குறும்படம் எடுப்பதுதான் எளிது என்று முடிவு செய்தோம். சிவகங்கையில் இருந்து வந்திருந்த பாரிராஜா ( இவர் சிற்றிதழ்களில் கவிதை எழுதுபவர், ஒரு ரசாயன ஏஜென்சியிலே விற்பனைப் பிரதிநிதியாக இருக்கிறார்) ஒரு கதை சொன்னார். அது உடனடியாக நிராரிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வந்திருந்த சேக்கிழார் ( இவர், சென்னை சட்டக்கல்லூரி மாணவ நண்பர்களுடன் இணைந்து சிறுபத்திரிக்கை நடத்தி கையைச் சுட்டுக் கொண்டவர், தற்காலிகமாக அடையாறு வசந்த பவனிலே சூப்பர்வைசர் வேலை பார்க்கிறார்) சொன்ன கதையை, முழுநீளத் திரைப்படமாகத்தான் எடுக்க முடியும். ஒளிப்பதிவாளர் கோவில்பட்டி சரவணக்குமார், தனக்கு சுத்தமாக story sense கிடையாது என்று நாகரீகமாக ஒதுங்கிக் கொண்டார். நானும் ஒரு கதை சொன்னேன். கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர் பற்றிய ஒன்லைன். அங்கிருந்த வசதிகள் கொண்டே அதை எடுக்க முடியும் என்றாலும், வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த எங்கள் குழுவினர் யாரும் ( நான் உள்பட) அந்த பிச்சைக்காரர் பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆக அதுவும் நிராகரிக்கப்பட, பின்னர், அறிவுமதி அவர்களின் கவிதை ஒன்றை, அப்படியே காட்சிகளாகப் படம் பிடித்துக் காட்டலாம் என்று முடிவு செய்தோம். எடுத்திருந்தால் அழகாக வந்திருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்குத் தேவைப்பட்ட பொருட்கள், சூழ்நிலை, எதுவும், அந்த குறைந்த நேரத்தில் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

Free Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us

ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று காமிராவுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த போது, ஊர்க் கோடியிலே ஒரு தச்சுக்கூடம் மாதிரி ஒன்றைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். அங்கே எழுபத்த்து இரண்டு வயதுக் கிழவர் ஒருவர் தனியாக உட்கார்ந்து தேர் ஒன்றை ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார். பாதி முடிந்த தேர், அருகிலே ஒற்றை ஆளாக அமர்ந்து சின்ன சின்னதாக யாளிகளைச் செதுக்கிக் கொண்டு இருந்த காட்சி, எங்களுக்கு போதுமானதாக இருந்தது. அவரிடம் பேசி, அதை அப்படியே ஒரு ஆவணப்படமாக எடுக்கலாம் என்று உடனடியாக முடிவு செய்ய, நான் உடனடியாக , அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை எழுதினேன். அவரிடம் பேச்சுக் கொடுத்து , கேள்வி கேட்க, சுற்றி சுற்றி வந்து நுணுக்கமாகப் படம் பிடித்தார் ஒளிப்பதிவாளர். தனித்தனியான பல காட்சிகளையும் படம் பிடித்தோம். சுமார் முப்பத்து ஐந்து நிமிடம் படம் பிடித்துவிட்டு, கிழவருக்கு நூறு ரூபாய் கொடுத்து விட்டு, வந்தோம்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள், ஆளாளுக்கு காமிராவைக் கையில் வைத்துக் கொண்டு ஊரையே கலங்க அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் பேருந்தில் ஏறி நடத்துனரிடம் அனுமதி வாங்கி, பஸ்ஸில் ஏறுகிற காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்க, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாரதி வாசன் அவர்களின் மகன் ( ஏழு வயதுச் சிறுவன்), கந்தல் சட்டை போட்டுக் கொண்டு ரோட்டிலே குப்பை பொறுக்குவதை இன்னொருவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். நாகர்கோவிலில் இருக்கும் ஒரு திரைப்பட இயக்கத்தில் இருந்து வந்து செல்வலட்சுமி ஒரு மூலையில் உட்கார்ந்து கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தார் ( pre-marital sex பற்றிய ஒரு குறும்படம் தயாராகிக் கொண்டிருந்தது ). தஞ்சையில் இருந்து வந்திருந்த தமிழ்ப்பேராசிரியர்கள் அம்சவேணியும், திலீப்குமாரும், ஒரு திடீர் நடிகருக்கு வசனத்தைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கணுவாய் கிராமம், ஒரு சின்ன திரைப்பட நகரம் போலத் தோற்றமளித்தது.

நாங்கள் எடுத்த திரைப்படத்தை அன்று இரவுதான் எடிடிங் செய்ய முடிந்தது. கேம்கார்டர் மைக் மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் தெளிவாகக் கேட்க முடியாததால், அந்த ஒலிப்பதிவை வெட்டி எறிந்து விட்டோம். பிறகு அதே காம்கார்டர் மைக் மூலமாகவே, தனியான ஒரு அறையில், குழுவில் நல்ல குரல் வளம் கொண்ட பாரிராஜா பின்னணிக் குரல் பேச, அதை பதிவு செய்து, பின் படத்துடன் சேர்த்துவிட்டோம். தொகுக்கப்பட்ட பின்னர், அந்தப் படம் , நான்குநிமிடங்களுக்கு மட்டுமே ஓடும் ஒரு படமாக வந்தது.

அன்றிரவுவும், குறும்படங்கள், ராஷமான் போன்றவை இரவு முழுதும் திரையிடப்பட்டன. வழக்கம் போலவே நான் கோவைக்குத் திரும்பிவிட்டேன். கோவையில் காசி இல்லத்தில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு.

நிறைவு நாள் அன்று காலையிலே மாணவர்கள் எடுத்த திரைப்படங்கள் போட்டுக் காட்டப்பட்டன. படம் எடுத்த குழுவினர் ஒவ்வொருவரும், மேடையிலே ஏற்றப்பட்டு, அவர்களது அனுபவங்களை இயக்குனர் அருண்மொழி கேட்டார். படத்தின் நிறை குறைகளை அலசினார். தேர்ந்தெடுத்த விஷயங்கள் எப்படி எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளைச் சொன்னார். இந்த நிகழ்ச்சி மதிய உணவு வரை நீடித்தது.

அதன் பின்னர் நிறைவு விழா. விழா ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி உரை தெரிவித்ததும், நிகழ்ச்சி முடிவடைந்தது.


****அப்பாடா... ஒரு வழியா எழுதி முடிச்சாச்சு... இனி ஒரு வாரத்துக்கு நோ பதிவு*************

Comments

Boston Bala said…
உங்க படத்தின் நிறை குறைகளையும் அருண்மொழி சொன்ன சாத்தியக் கூறுகளையும் பகிர்ந்து கொள்ள முடியுமா? இந்தப் பதிவுக்கு நன்றி ஐகாரஸ் :-)
Mookku Sundar said…
ஆவணப்படமா..?? ம்..

இத்தனை அருமையான கவிதைகள்/ கதைகள் படிச்சுருக்கீங்க. ரெண்டு/மூணு தடியனுகளை வெச்சி எடுக்கற மாதிரி ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலையா..??

சரி சரி..அந்த "நகர்வை" வலையேத்த ஏலுமா..??

( திருப்பாசேத்தி அருவாவைப் பத்தி திருப்பாசேத்தி அரிவாள் பட்டரையிலிருந்து ஒரு மேட்டர் பண்ணது ஞாபகத்துக்கு வருது பிரகாஷ்.
ஜூனியர் போஸ்ட்ல கலக்கலா வந்துது அந்த மேட்டர் - ம்ஹூம்..அது ஒரு காலம். :-) }
// Boston Bala said...
உங்க படத்தின் நிறை குறைகளையும் அருண்மொழி சொன்ன சாத்தியக் கூறுகளையும் பகிர்ந்து கொள்ள முடியுமா?
//

மூணு நாளா ஒரே மேட்டரை எழுதி எழுதி... ஒரே போர் :-). அருண் மொழி சொன்னதை இங்கே எழுதறது பெட்டரா இல்லை ' காட்டறது' பெட்டரா? :-) நீங்களே சொல்லுங்க...:-)
//ரெண்டு/மூணு தடியனுகளை வெச்சி எடுக்கற மாதிரி ஒண்ணும் ஞாபகத்துக்கு வரலையா..?? //

சுந்தர், ஞாபகத்துக்கு வந்து தொலைக்கலியே அதானே பிரச்சனை :-).

//சரி சரி..அந்த "நகர்வை" வலையேத்த ஏலுமா..?? //

நகர்வு இன்னும் கைக்கு கிடைக்கலை. சிடியிலே எரிச்சு அனுப்பி வெக்கறதாச் சொன்னாங்க.. கைக்கு வந்ததும், ஏத்தறேன்..
SnackDragon said…
பதிவுக்கு நன்றி.
ஐனோமீனோ: 'சிடி' க்கு சிரிச்சீங்களா இல்ல 'எரிச்சு' க்கு சிரிச்சீங்களா?

karthik : yw
பிரகாஷ், பதிவுக்கு நன்றி.. உங்களுக்கு எந்த குறும்படம் பிடிச்சிருந்தது, ஏன் அப்படின்னு கொஞ்சம் ஓய்வெடுத்த பின் எழுதினா நல்லா இருக்கும்!
Muthu said…
Dear prakash,
Iam new to blogging..i sent a mail to you two days back about posting unicode etc..somehow i myself learned..iam interested in tamil literature ..it seems you are also having the same interests..i request you to visit my blog
//அருண் மொழி சொன்னதை இங்கே எழுதறது பெட்டரா இல்லை ' காட்டறது' பெட்டரா? :-) நீங்களே சொல்லுங்க...:-)
//

அருண்மொழி சொன்னதை எழுதி நீங்க எடுத்ததைக் காட்டுங்களேன். :)

பிச்சைக் காரன் பாத்திரத்துக்க்க்க்க்கும் என்னை ஞாபகத்துக்கு வர்லையா? :(

நல்ல பதிவு. நன்றி

அன்புடன்
சுந்தர்.

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I