Reliance - உடைந்த சாம்ராஜ்ஜியம்

அம்பானி பற்றி ஒரே வலைப்பதிவில் சொல்லி விட முடியாது. ( சொக்கன் எழுதிய ) புதிதாக, திருத்தப் பட்ட , இரண்டாம் பதிப்பும் வந்து விட்டதாம். வாங்கிப் படித்துக் கொள்ளலாம். அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இந்திய வர்த்தக உலகின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாளம். அவர்கள் செயல்முறைகளில், அணுகுமுறைகளில், கொள்கைகளில், பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும், துணிச்சலும், தைரியமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும் கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ரிஸ்க் எடுப்பதிலும், புதுப்புது திட்டங்களை அமுல்படுத்துவதிலும், அவர்கள் பலருக்கு முன்னோடி. அப்படிப்பட்ட பல பில்லியன் ரூபாய்கள் மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில், சில மாதங்களாக நடந்து வந்த குழப்பம், பிரசித்தமானது.

கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த பங்காளி சண்டை, நேற்று ஓரளவுக்குச் சுபமாக முடிந்தது.

இரு வருடங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ் அதிபர் அம்பானி நோய்வாய்ப்பட்டு இறந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே, அம்பானியின் மகன்கள் இருவருக்குள்ளும் வேறுபாடு எழுந்தது. நாளாவட்டத்தில் விரிசல் பெரிதாகி, சில மாதங்களுக்கு முன்பு, பொது ஊடகங்களில் வெடித்தது.

ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள நிறுவனங்களில், அனில், மற்றும் முகேஷ் அம்பானி சகோதரர்களுக்கு எத்தனை பங்கு இருக்கிறது, நிர்வாக இயக்குனர்களில், யார், யாருடைய பக்கம் என்பது போன்ற ஈகோ மோதல்கள் ஏற்பட்டு, பெரிதாக வளர்ந்தது. திருபாய் அம்பானி உயிருடன் இருந்த நாட்களில், நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு, முகேஷ் அம்பானிக்கு அதிக அதிகாரமும், அனில் அம்பானிக்கு குறைச்சலான அதிகாரமும் அளிக்கப்பட்டு இருந்தது. அதை சாதகமாக ஆக்கிக் கொண்டு, முகேஷ் அம்பானி, தம்பிக்கு ஆதரவான ஆட்களை எல்லாம் நிர்வாக உயர் குழுவில் இருந்து ஒதுக்கி வைத்தார்.சிக்கல் பெரிதாக வளர்ந்தது. அம்பானி சகோதர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், முகம் கொடுத்துப் பேசிக் கொள்ளாமல், சூடான பத்திரிக்கை அறிக்கைகள் மூலமாகவே சந்தித்துக் கொண்டனர். பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்கு விலை சடசடவென்று சரிந்தது. இந்த சர்ச்சை, திருபாய் அம்பானியின் மனைவி மூலம், நேற்று ஒரு முடிவுக்கு வந்தது.

ரிலையன்ஸ் குழுமத்தில் இருக்கும் நிறுவனங்கள், அவற்றின் மொத்த மதிப்பு ஆகியவற்ற்றை நிபுணர்களின் துணை கொண்டு கணக்கெடுத்து, ஆளுக்கு சரிபாதியாக பிரித்துக் கொடுத்து விட்டார். எண்ணை சுத்திகரிப்பு, பாலிமர் ஆகியவற்றை முக்கிய வர்த்தகமாகக் கொண்ட ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள், முகேஷ் அம்பானிக்கும், மின்சார உற்பத்தி பிசினஸாகக் கொண்ட ரிலையன்ஸ் எனர்ஜி, நிதி நிறுவனமான ரிலையன்ஸ் காபிடல், தொலைத் தொடர்பில் ஈடுபட்டிருக்கும் ரிலையன்ஸ் இன்·போகாம், ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானிக்கும் கிடைத்திருக்கின்றன.

ஒட்டு மொத்த மதிப்பை வைத்துப் பார்த்தால், அனிலுக்குக் குறைவாகவும், முகேஷ¤க்கு அதிகமாகவும் கிடைத்திருக்கிறது என்றாலும், அனில் இதை வைத்து ஏதும் பிரச்சனையைக் கிளப்பாதது, நல்ல விஷயம். ஆனால், தன்னுடைய திறமையால், முகேஷ் அம்பானியை விட, அனில் நன்றாகச் செயல்பட்டு, பங்குதாரர்களுக்கு நல்ல இலாபம் ஈட்டித் தருவார் என்று நம்ப இடம் இருக்கிறது. மேலும், முகேஷ் அம்பானியின் வசம் இருக்கும் flagship நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாலிமர் உற்பத்தியிலும், எண்ணை சுத்திகரிப்பிலும் முன்னணியில் இருக்கும் நிறுவனம். நன்றாக காலூன்றிய நிறுவனம். என்றாலும், manufacturing sector என்ற வகையைச் சார்ந்தது. அந்த நிறுவனத்தின் உற்பத்திப் பெருக்கமும், சந்தைத் தேவையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், அம்பானி வசம் இருக்கும் ரிலையன்ஸ் எனர்ஜி என்ற நிறுவனம், அடிப்படை உள்கட்டமைப்பு வகையைச் சார்ந்தது. அதிலும் இப்போதுதான் சந்தையில் இடத்தைப் பிடிக்கத் துவங்கி இருகிறார்கள். அவர்களுடைய திட்டங்களும் ( projects ) பல்வேறு விதமான தருவாய்களில் இருக்கின்றன. இந்த நிலையில் இருக்கும் நிறுவனத்தை திறமையாக நடத்த, முகேஷை விடவும் அனில் அம்பானி சரியான தேர்வு என்பது என் சொந்த அபிப்ராயம். அனில் அம்பானிக்கு வந்து சேர்ந்திருக்கும் இன்னொரு நிறுவனமான ரிலையன்ஸ் இன்·போகாமும், டெலிகாம் சர்வீஸஸ் என்ற வகையைச் சார்ந்தது. இந்த துறைக்கு இருக்கும் வாய்ப்புக்கள் மிக மிக அதிகம். இதற்கும் அனில் தான் ஏற்றவர்.

இப்பொதைக்கு முகேஷ் அம்பானி பக்கம், தராசு சாய்ந்தது போல இருந்தாலும், அனில் தான் கடைசியில் ஜெயிக்கப் போகிறார் என்று நினைக்கிறேன்.

மீடியாக்களில், அப்பா சொத்துக்கு பிள்ளைகள் அடித்துக் கொள்கிறார்கள் என்கிற மாதிரி எல்லாம் செய்திகள் வந்தன. ( குறிப்பாக தமிழ் நாளிதழ்களில் ). அது உண்மை அல்ல. இந்த நிறுவனத்தை, திருபாய் அம்பானி தோற்றுவித்திருந்தாலும், ரிலையன்ஸ் குழுமத்தை, அப்பாவும் இரு மகன்களுமாகத்தான் உழைத்து கட்டிக் காப்பாற்றினார்கள்.யாருடைய திறமையால் அந்தக் குழுமம் இத்தனை தூரம் வளர்ந்தது என்பதை இது வரை சரியாகக் கணித்துச் சொல்லி விடமுடியாது.

இனி பங்கு மார்க்கெட்டும், ஆண்டறிக்கையும் சொல்லி விடும். அனிலா முகேஷா , யார் திறமைசாலி என்று..

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I