நேர்முகமும் எதிர்முகமும்


திண்ணையில் வெளியான கட்டுரை .படிப்பதற்கு போரடிக்கும் என்று தோன்றினால் , இந்தப் பாட்டைக் கேட்டு விட்டு, தமிழ்மணத்தை f5 செய்யலாம். என் உலகத்தை மேலும் இனிமையானதாக மாற்றும் சில பாடல்களில் இதுவும் ஒன்று.


நேர்முகம்

புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் சென்னை வெய்யிலைப் போன்றது . போன வருடத்தை விட இந்த வருடம் ஜாஸ்தி என்று எல்லா வருடமும் சொல்கிறார்கள். நுழைந்ததும் வரவேற்கும் டெல்லி அப்பளம் பேல்பூரி சமோசா இத்தியாதிகளிடம் இருந்து தப்பித்து உள்ளே நுழைந்தால், உடனே வெளியே ஓடிப்போய்விடலாமா என்றுதான் முதலில் தோன்கிறது. அத்தனை நெரிசல். வேறு எங்காவது, நல்ல இடவசதி உள்ள இடமாக மாற்றக்கூடாதா என்று பதிப்பக நண்பர்களிடம் புலம்பினால், அந்த அதிகாரம், பதிப்பாளர் சங்கமான பிபாஷாபாசுவிடம் ( அல்லது அதைப் போலவே ஒலிக்கும் ஒன்றிடம்) இருக்கிறதாம். சங்கத்தின் தலைவர் பெயர் முத்துக்குமாரசாமி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் துணை இதழ் சொன்னது. அவரது மின்னஞ்சல் யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். அடுத்த வருடமாவது, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டருக்கு மாற்றக்கோரி, கையெழுத்து வேட்டை நடத்தி, அவருக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்.

நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் ஸ்டால்களுக்கு எப்போதுமே அதிர்ஷ்டம் அதிகம். அங்கே நுழைந்து நாலைந்து புத்தகங்கள் பொறுக்கிக் கொண்ட பின்புதான், நாம் வாங்க வேண்டிய புத்தகங்கள், மறுகோடியில் இருப்பது தெரியவரும். ஆகையால், முதலில் ஒரு விண்டோ ஷாப்பிங் உலா வந்துவிட்டு, அடுத்த உலாவில், புத்தகங்களை வாங்குவது பர்ஸ§க்கு நலம் பயக்கும். சுஜாதாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுதிகளைப் புரட்டிய போது, அதில் உள்ள முக்கால்வாசி சிறுகதைகள், ஏற்கனவே இருக்கும் வெவ்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருப்பது, தெரியவந்தது.விலை அதிகமாகத் தோன்றியது என்றாலும் நல்ல நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு இருந்தது. புத்தக விலை பற்றி பேசினாலே, புத்தகப் பதிப்பாளர்களின் இரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. " போய், இங்கிலீஸ் புத்தக விலையெல்லாம் பாத்துட்டு வந்து சொல்லுங்க" என்று நிர்த்தாட்சண்யமாகப் பேசுகிறார்கள். "ரெண்டாயிரம், மூவாயிரம் காப்பி போட்டு, வித்து, லைப்ரரி ஆர்டர் எடுக்க அலைஞ்சு, ராயல்ட்டி குடுத்து.... எங்களுக்கும் கட்டுப்படியாக வேண்டாமா?..." என்று கேட்கிறார்கள். லட்சக் கணக்கில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இருக்கிற இடத்திலே, ஆயிரம் , ரெண்டாயிரம் காப்பிகள் மட்டுமே விற்க முடிகிறது என்றால், உங்களுக்கு விற்கத் தெரியவில்லை அல்லது சந்தையைப் பெரிதாக்கத் தெரியவில்லை என்று யார் அவர்களிடம் சொல்வது?

வழியேற பிரபலங்கள் தென்படுகிறார்கள். பார்த்த முகமாக இருக்கிறதே யாராக இருக்கும் என்று யோசிப்பதற்குள் அவ்விடத்தை விட்டு அகன்றுவிடுகிறார்கள். எழுத்தாளப் பிரபலங்களை அடிக்கடி சந்திக்க, அதாவது, பார்க்க முடிந்தது. குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் அனைத்திலும், விருந்தினர்களாக, எழுத்தாளர்கள் வந்திருந்து, வாசகர்களுடன் கலந்து உரையாடி சிறப்பித்தார்கள். சுந்தர.ராமசாமியின் புதிய நூலை ( வானகமே இளவெயிலே மரச்செறிவே ) வாங்க காலச்சுவடு அரங்குக்கு சென்ற போது, எழுத்தாளர் சல்மா, அங்கே ஒரு வாசகருடன் ( என்று நினைக்கிறேன்) உரையாடிக் கொண்டிருந்தார். பில் போடும் இடத்தில், அரசு உயர் அதிகாரி தோற்றத்தில் இருந்த ஒருவர், கையில், சு.கி.ஜெயகரன் எழுதிய நூல் ஒன்றை வைத்துக் கொண்டு, பணம் கட்டக் காத்திருந்தார். " ஆத்தர் டிஸ்கவுண்ட் எவ்வளவுப்பா? " என்று அவர் அந்த ஊழியரிடம் கேட்கவும், சட்டென்று அவரைப் பார்த்தேன். அந்த ஊழியருக்கு அவர் கேட்டது புரியவில்லை போலிருக்கிறது. " இல்லே நான் தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர். எனக்கு டிஸ்கவுண்ட் எவ்வளவு ? " என்று கேட்கவும், " ஓஹோ, அப்படிங்களா ? " என்று சொல்லிவிட்டு, யாரையோ விசாரிக்க முனைந்ததும், இவர் அதை தடுத்து, " அதல்லாம் வேண்டாம், டைமாச்சு... " என்று சொல்லிவிட்டு பணம் கொடுத்துவிட்டு, நகர்ந்தார். புத்தகக் கண்காட்சி அரங்குக்குள் இருக்கும் ஊழியர்களுக்கு, உலக இலக்கியவாதிகள் பெயர் தெரியாவிட்டாலும் பாதகமில்லை. ஆனால், தங்கள் பதிப்பகம் வெளியிட்ட நூல்களின் ஆசிரியர் பெயர்/முகம் பரிச்சயம் அவசியம் வேண்டும்.

தமிழினி பதிப்பகத்தில் இருப்பேன் என்று ஜெயமோகன் திண்ணையில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்தென்றாலும் , எந்த எந்த நாட்களில் என்பது நினைவுக்கு வரவில்லை. முதல் முறை போன போது, அடுத்த நாள் வருவார் என்று சொன்னார்கள். அடுத்த முறை போன போது, வந்து போய்விட்டார் என்று சொன்னார்கள். ஜெயமோகனுக்கு அதிர்ஷடமில்லை என்றாலும் அன்றைய தினத்தில் அசோகமித்திரனுக்கு அதிர்ஷட்ம் இருந்தது. கிழக்குப் பதிப்பகம் அரங்கில் அமர்ந்திருந்தார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அசோகமித்திரன் கட்டுரைகள் என்ற மெகா தொகுதியை கையில் வைத்துக் கொண்டு, அதிலே செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பதிப்பாளரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். அசோகமித்திரன் கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆதவனுடைய காகிதமலர் பற்றிய அவரது விமர்சனமும், ஆத்மாநாம் பற்றிய நினைவஞ்சலிக் கட்டுரையும், முன் எப்போதோ தற்செயலாகப் படித்தும், இன்னும் நினைவில் இருக்கிறது. சென்னை நகர மக்களின் வாழ்க்கையை சித்திரித்து வந்த படைப்புக்களில் தென்படும் wry humor ரொம்பப் பிடிக்கும். அசோகமித்திரனுக்கு விழா எடுக்கப் படப் போவதாக வந்த செய்தி மகிழ்ச்சி அளித்தது.

எதிர்முகம்

அரசியல், சினிமா, நாவல் கட்டுரைத் தொகுதி என்று வகை வகையாக வாங்கித் தள்ளினாலும், குறிப்பிடவேண்டிய புத்தகம், ஜெயமோகன் எழுதிய ' எதிர்முகம் - இணைய விவாதங்கள்".

என் நண்பர்கள் நடத்தி வரும் மரத்தடி குழுமத்தில் நடந்த உரையாடல்களுக்கு, இலக்கிய அந்தஸ்து கிடைத்திருப்பது தனிப்பட்ட முறையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்ற விஷயம். ஆயினும், நூலின் முன்னுரையாக , அவர் எழுதியிருக்கும், ' இணையத்தில் இலக்கியம் ' என்ற கட்டுரை, மீது சில கேள்விகள் இருக்கின்றன.
ஜெயமோகனின் புனைவல்லாத விஷயங்கள் தவிர்த்து , படைப்பிலக்கியங்களை, அதிகமாக வாசித்ததில்லை என்கிற உண்மை, அவர் தமிழிணையத்தார் மீது வைக்கும் விமர்சனங்களின் முகாந்திரத்தை ஆராய முற்பட்டால், குறுக்கே வராது என்று ஒரு குருட்டு நம்பிக்கை ஏற்படுகின்றது. முன்னுரையின் ஐந்தாவது பத்தியை வாசிக்கும் போது , தமிழ் இலக்கிய மரபின் தோற்ற வளர்ச்சி குறித்து அதிகமாக அறியாதவன் (நான்) என்கிற வகையில், இந்தக் குருட்டு நம்பிக்கை இன்னும் அதிகரிக்கிறது.

இணையத்தில் வலம் வருபவர்களுக்கு ஜெயமோகன் மீது ஏதேனும் அபிப்ராயம் இருப்பது போலவே, ஜெயமோகனுக்கும், இணையத்தில் வலம் வருகின்றவர்கள் மீது சில அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால், இவ்விரு தரப்பினரின் அபிப்ராயங்களும், பெரும்பான்மையான சமயங்களில், மிகவும் தட்டையாகவும், மேலெழுந்தவாரியாகவும், அமைகின்றன என்பதை சிலர் வேண்டுமானால் ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம். அபிப்ராயங்களுக்கும் , அசலான உண்மைகளுக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டியதில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

அக்கட்டுரையில், ஜெயமோகன் எழுதுகிறார்...

"....இணையம் வந்த போது உற்சாகத்துடன் அதில் பங்கு கொள்ள ஆரம்பித்தேன். பிற்பாடு அந்த வேகம் குறைந்தது. முக்கியமான காரணம், இணையத்தில் விவாதிக்க வருபவர்களில் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்ட வாசகர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதுதான். விகடன் போன்ற பெரிய இதழ்கள் வழியாக அறிமுகமாகும் வாசகர்களை விடவும் , அவர்களின் பொதுவான தரம் குறைவுதான் என்றே நான் உணர்கிறேன். இதற்கு பல சமூக உளவியல் காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக எனக்குப் படும் காரணங்கள் இரண்டு. ஒன்று : இணையம் மூலம் வாசிக்க வரும் உயர் மட்ட, அல்லது நடுத்தர மட்ட வாழ்வைச் சார்ந்தவர்கள் ஆகவே வாழ்வு குறித்த மிதப்பான போக்கே இவர்களிடம் உள்ளது. தமிழ்ச் சிற்றிதழ்களின் வாசகர்களாக வரும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் கோபமும் தீவிரமும் இவர்களிடம் இல்லை. இக்காரணத்தால் மேலோட்டமான , விளையாட்டான விஷயங்களையே இவர்கள் உண்மையில் நாடுகிறார்கள். தங்களால் மகிழ்ந்து உலவ முடியக்கூடிய இடங்களையே தெரிவு செய்கிறார்கள். இரண்டு : இணைய வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் துறையில் பயிற்சி பெற்றவர்கள். சில சமயம் நிபுணர்கள். அவர்கள் உண்மையான சவாலை எதிர்கொள்வதும் உழைப்பதும் அத்துறையில் தான். இலக்கியம் அவர்களுக்கு இளைப்பாறுதலுக்காக மட்டுமே. அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க அவர்கள் தயாராக இல்லை."

என் கேள்வி, இணையவாசகர் , அச்சு ஊடக வாசகர் என்ற பிரிவு நிஜமாகவே இருக்கிறதா?

நான் அறிந்து இணைய எழுத்தாளருக்கும்/வாசகருக்கும் அச்சு ஊடக எழுத்தாளர்/வாசகருக்கும் இடையிலே இருக்கும் ஒரே வேறுபாடு, முன்னவருக்கு , எழுத்து ஒளிப்புள்ளிகளாக செல்கிறது, பின்னவருக்கு அதுவே அச்சு மை. வாசகர்கள் உட்பட்டு இருக்கும் புவியியல் எல்லைக் கோட்டிற்கும், அவர்களின் வாசிப்புத் திறனுக்கும் தொடர்பு இருக்கிறதா? கிராமத்து கீழ் மட்ட இளைஞர்கள் என்ற பொதுப்படையான சித்திரிப்பை - இணைய வாசகர்களில் ஒரு பகுதியினர், வளைகுடா, தென்கிழக்காசிய நாடுகளில் பணியாற்றும் இங்கிருக்கும் கிராமங்களில் இருந்து சென்ற கீழ் மட்ட இளைஞர்கள்தான் என்று அறியாமல் - எப்போது நிறுத்தப் போகிறார்கள்?

விடலைத் தனம் வளர்க்கும் வெகுசனப் பத்திரிக்கை மூலம் வரும் வாசகர்களின் தரம் கூட இவர்களிடம் இல்லை ஆதங்கமாகச் சொல்வது, எனக்கு நல்ல சேதியாகக் காதில் விழுகின்றது. தமிழ் இணையச் சமூகத்துக்கு, இவ்வகை 'இடக்கை புறந்தள்ளல்' புதிதல்ல.

Comments

பிரகாஷ், உங்களது இந்தப் பதிவை மட்டும் படித்துவிட்டு ஜெயமோகனின் கருத்துக்கள் குறித்து எழுதுவது சரியில்லைதான். ஒரு கட்டம் வரையில் ஜெயமோகனது புனைவுகளையும் அ-புனைவுகளையும் படித்து வந்திருப்பதால், இந்த ஒரு புத்தகத்தில் மட்டும் ரிவர்ஸ் க்ரிகர் சம்ஸா போல அ-புனைவுக் கரப்பான்பூச்சியிலிருந்து மனிதனாகியிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில், முன்பே பலமுறை நிகழ்ந்ததுபோல, அந்த ஒரு பத்தியைப் படித்ததுமே ஆசனவாயில் சுண்ணாம்பைத் தேய்த்ததுபோல வெந்துபோனதால் இதை எழுதுகிறேன்.

//இணைய வாசகர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏதேனும் துறையில் பயிற்சி பெற்றவர்கள். சில சமயம் நிபுணர்கள். அவர்கள் உண்மையான சவாலை எதிர்கொள்வதும் உழைப்பதும் அத்துறையில் தான். இலக்கியம் அவர்களுக்கு இளைப்பாறுதலுக்காக மட்டுமே. அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க அவர்கள் தயாராக இல்லை.//

அப்படியா! இலக்கியப்பயிற்சி பெற்றுவிட்டு இளைப்பாறலுக்காக மத்திய அரசுத் துறையொன்றின் சங்கை அறுப்பதற்குத் தான் கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவு பற்றி இதற்கடுத்து ஏதாவது எழுதியிருக்கிறாரா தலைவர்?

//இணையம் மூலம் வாசிக்க வரும் உயர் மட்ட, அல்லது நடுத்தர மட்ட வாழ்வைச் சார்ந்தவர்கள் ஆகவே வாழ்வு குறித்த மிதப்பான போக்கே இவர்களிடம் உள்ளது. தமிழ்ச் சிற்றிதழ்களின் வாசகர்களாக வரும் கிராமத்து கீழ்மட்ட இளைஞர்களின் கோபமும் தீவிரமும் இவர்களிடம் இல்லை. //

வெங்காயம் புண்ணாக்கு! Urban psyche என்று ஒன்று உள்ளதென்பதைப் புரிந்துகொள்ளாமல் உளறுவதென்பது இதுதான். இந்தமாதிரி ஆசாமிகள் இன்னும் கிராமம் நல்லது/நகரம் கெட்டது, கிழக்கு நல்லது/மேற்கு கெட்டது, தால்ஸ்தாய் நல்லவர்/இன்னொருத்தர் கெட்டவர் என்று பேசிப் பேசி நைந்துபோனவர்கள். இணையத்தைப்பற்றிய ஜெயமோகனின் இணைய உளறல்களைப் படித்தால் இது உங்களுக்குத் தெரியவரும். அச்சு இயந்திரங்கள் பைபிள்களை ஏராளமாக அச்சடித்து சாதாரண மக்களுக்கு விநியோகித்து, அவர்கள் படிக்கத்தொடங்கிவிட்டால் அவர்கள் மீதான தேவாலயங்களின் பிடி தளர்ந்துவிடும் என்ற அச்சம் காரணமாக அச்சடித்த பைபிள்களைத் தடைசெய்யமுயன்று தோற்றுப்போன கத்தோலிக்க சர்ச்சின் புலம்பல் போலத்தான் இதுவும் உள்ளது. இணையத்தில் தமிழை எழுதத்தொடங்கிவிட்டார்கள், இனி தோன்றியதையெல்லாம் எழுதுபவனைக் கட்டுப்படுத்த முடியாது; வாசகன் கையையும் காலையும் கட்டிப்போட்டு, லவுட்ஸ்பீக்கர் மாதிரி நாம் அலறுவது இனி சாத்தியமில்லை. "எனக்கு அன்னியன் புத்தகத்தை அறிமுகப்படுத்துவீர்களா" என்று அல்லி பதில்கள் மாதிரி எழுத்தாளனிடம் கேட்காமல் வாசகனே இணையத்தில் நோண்டி நொங்கெடுத்து புத்தகத்தைத் தேடிப் படித்துப் பார்ப்பான், சிறுபத்திரிகைக் கூட்டணி வைத்துக்கொண்டு மாற்றுக்கருத்து எழுதும் அப்பாவி வாசகனோ எழுத்தாளனோ அனுப்புவதையெல்லாம் குப்பைக்கூடையில் போடமுடியாது - இந்தச் சாத்தியங்களையெல்லாம் ஜெயமோகனின் போதனா-ஒலிபெருக்கி மனப்பான்மையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவும். கூகிளில் தேடுபவர்கள் என்று அரவிந்தன் நீலகண்டனும் தலைவரும் திண்ணையில் அடிக்கொருதரம் எழுதுகிறார்கள் - இவர்கள் நோக்கம் என்ன? கெட்டி பைண்டு என்சைக்ளோபீடியாக்களை வைத்துக்கொண்டு "ஆஹா பக்கங்களின் வாசனையின் சுகமே சுகம்" என்று முகர்ந்து பார்த்துக்கொண்டு விருட் விருட்டென்று பக்கங்களைத் திருப்பவேண்டும் என்பதா? one inch deep, one mile wide அல்லது one mile deep, one inch wide என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஜல்லியடிக்க அவர்களுக்கு இஷ்டமிருப்பின் அடித்துக்கொண்டு போகட்டும்; வாசகத் தளத்துக்கு, வாசகனுக்கு இரண்டும் தேவை, இரண்டுவிதமாக எழுதுபவர்களும் தேவை. ஆழமில்லாமல் பேசுகிறார்கள் என்று ஒரு அஸ்திரத்தை படக்கென்று எய்துவிடவேண்டியது!! மரபியலைப் பற்றியும் க்வாண்டம் இயற்பியலைப் பற்றியும் கூகிளில் தேடுபவர்களை நக்கலடித்துக்கொண்டு, 'A short introduction to Genetics' என்று புத்தகங்களை மூர்மார்க்கெட்டில் வாங்கி ஒரு anthology மாதிரிப் படித்துவிட்டு, "நான் இணையத்தில் தேடவில்லை, இதோ பார் புத்தகம் படித்துவிட்டேன் மேதாவி, மரபியல் எனக்குத் தலைகீழ் பாடம்" என்று கூடைக்குள் பாதிக் கோழிகளை அமுக்கிய சேவல் போலக் கூச்சலிடலாம். சகலத்தையும் தானே எழுதவேண்டுமென்று நினைக்கும் ஆல் இன் ஆல் ஆறுமுகங்களின் இந்தப் புலம்பலை எத்தனை நாள் கேட்பது? இணையத்தின் துவாரங்களுக்குள் தங்கள் விரல்களை நுழைப்பவர்கள் முதலில் பேசுவதை நிறுத்தவேண்டும். இணையத் தேடலுக்கும், ஒரு இழவெடுத்த உரையாடலுக்கும் என்ன பெரிய வித்தியாசம் உள்ளது. உரையாடல் மூலமாகக் கிடைக்கும் ஒரு பொறியைக்கொண்டு படைப்புக்கான உந்துசக்தியைப் பெறுவதற்கும், இணையத்தேடலின் ஒரு தடுக்கிவிழல் மூலமான உந்துசக்தியைப் பெறுவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? உரையாடலின் sublime தன்மை இணையத் தேடலில் கிடைக்காதா என்ன? முன்பே நான் என் பதிவிலோ எங்கோ எழுதியது (பாரு எவ்வளவு அறிவீனம் தீவிரமின்மை? Endnote சாஃப்ட்வேர் வைத்து ஒரு bibliography/index கொடுக்கவேண்டாமோ என்பார் தலைவர்!) போல செல்லில் கதிமோட்சம் காணும் விமலா என்ற கதாபாத்திரத்தைக் கன்னியாகுமரியில் படைக்கமுடிகிறது, நேரில் அதேபோன்ற ஒரு விமலாவைச் சந்தித்துவிட்டால் அச்சிட்ட அத்தனை பிரதிகளையும் கைப்பற்றி விமலா பாத்திரத்தை ரப்பர் வைத்து அழிப்பாரா என்ன? இல்லையில்லை, விமலாவைப் படைத்ததனால்தான் அவர் பெரும்படைப்பாளி.

//விகடன் போன்ற பெரிய இதழ்கள் வழியாக அறிமுகமாகும் வாசகர்களை விடவும் , அவர்களின் பொதுவான தரம் குறைவுதான் என்றே நான் உணர்கிறேன்.//

மன்னார் அண்டு கோ முந்திரிக்கொட்டை கம்பெனி மேனேஜிங் டைரக்டர் பேசுவது மாதிரி இருக்கிறது. எழுத இடமளித்தால் விகடனின் கொம்பு மிஞ்சும், எழுத இடமளித்தால் குமுதத்தின் தண்டு மிஞ்சும், எழுத இடமளித்தால் திண்ணை இடிக்கப்படாது, இல்லையேல் கொம்பு முறிக்கப்படும், தண்டு ஒடிக்கப்படும்படும், திண்டு இடிக்கப்படும் கபர்தார் என்று இருப்பின் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

//முக்கியமான காரணம், இணையத்தில் விவாதிக்க வருபவர்களில் தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்ட வாசகர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதுதான்.//

போடு சக்கை. அச்சாகும் பத்திரிகையில் எழுதுபவர்களே மிகவும் குறைவு, புலியே!! சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாமா? இன்றைக்கு உள்ள எத்தனை எழுத்தாளர்கள் தானாகப் பத்திரிக்கை போட்டுக் கதைகளையும் கட்டுரைகளையும் தொடக்ககாலத்தில் பிரசுரித்தவர்கள்? அர்ப்பணிப்பு, தீவிரம், பயிற்சி, முயற்சி - இதெல்லாம் என்ன தலைவா! இங்கே எழுதும் யாருக்கும் அதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாதென்பது நிஜம்தான். அடுத்த கட்டுரைத் தொடருக்கு பொருத்தமான தலைப்பு. முன்பே ஒரு பட்டியல் வந்தது. பா.ராகவன் ஒன்பது கட்டளைகள் எழுதும்போது தலைவர் குறைந்தபட்சம் தொண்ணூற்றொன்பதாவது எழுதாவிட்டால் எப்படி? எடு அருவாளை, போடு போடு போடு பலமாப் போடு ஒக்கா மக்கா!!

//....இணையம் வந்த போது உற்சாகத்துடன் அதில் பங்கு கொள்ள ஆரம்பித்தேன். பிற்பாடு அந்த வேகம் குறைந்தது.//

ரோட்டில் தான் மட்டும் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தால் வண்டி வேகமாகத்தான் போகும். நிறையப் பேர் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தால் வேகம் குறையத்தான் செய்யும். என்ன செய்வது? வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது என்று கர்ஜித்துக்கொண்டு வண்டி ஓடமுயன்றால் சுற்றியிருக்கும் வண்டிகள் இடித்து ஓரத்தில் தள்ளத்தான் செய்யும் என்பதைப் புரிந்துகொண்டால் நலம்!
Mookku Sundar said…
அடே அடே அடடே..

ஒக்கா மக்கா..அடிச்சு கெளப்பிட்டியளே..

நோண்டி நொங்கு எடுத்துட்டியளே..

ஜூப்பரா கீதுபா.. ஜெயமோகன் வாசகர்கள் யாராவது பாத்தா என்ன ஆவும். முக்கியமா சூர்யா..:-)
ROSAVASANTH said…
காலையிலே எழுந்து டாய்லட் கூட போகாம, பிரகாஷ் பதிவிலே உங்க பின்னூட்டத்தை படிச்சு, உங்களுக்கு ஸூப்பர்னு ஒரு ஓட்டு போட்டேன். இன்னும் நிதானமா படிக்கலை. டாய்லட் எல்லாம் முடிஞ்சு, படிச்சு கருத்து இருந்தா எழுதுவேன்.
ROSAVASANTH said…
ஸாரி, டாய்லட் அவசரத்துல தமிழ் பாம்பு பதிவுலே போடவேண்டிய பின்னூட்டத்தை இங்கயே போட்டுட்டேன். ஆனா வோட்டு கரெக்டா(ஸூப்பர்!) பாம்பு பதிவுக்கு தான் போட்டேன்.

இகாரஸ் கட்டுரை நேற்றே திண்ணையில் படித்துவிட்டேன். பாம்பு ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். தொடரட்டும்!
Thangamani said…
இலக்கிய தேவிக்கு ஜெயமோக நாயனாரோ அல்லது அவர் பீடம் ஆசியளித்த குட்டி நாயனார்/ஆசாரியாரோ தான் பூஜை செய்யமுடியும் என்ற நினைப்பில் வந்த பதில். பிரகாஷ் 2000 பிரதிகளே புத்தகம் அடிப்பதாய் சொன்னதற்கு வருத்தப்பட்டீர்களே, இப்படி ஒவ்வொருத்தராக இலக்கியம் படிக்க மட்டும், படிக்க/எழுத மட்டும், படிக்க/பேச/எழுத, எழுத மட்டும், இப்படி ஜெயமோகன் எல்லாரை பிரித்து அடுக்கி நவீன வர்ணாசிரமத்தை உபதேசித்தருளினாரென்றால் அப்புறம் 2000 பேர்கூட படிக்க இருக்கமாட்டார்கள்!!

நன்றி உங்களுக்கும், தமிழ்பாம்புக்கும்!
Mookku Sundar said…
என்ன பாட்டு..இது பிரகாஷ்,,சரியான off-beat.

என்ன படம்..??
ROSAVASANTH said…
//என்ன பாட்டு..இது பிரகாஷ்,,சரியான off-beat.//

எனக்கும் இது அபிமான பாடல். 'மீண்டும் ஒரு காதல் கதை', என்று ராதிகா/ப்ரதாப் மனநிலைபாதிக்கப்பட்ட கதையை வைத்து எடுத்த நல்லபடம். அவார்ட் வாங்கி ஞாயிறு மதியம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு கூட ஆகியது.

சாருஹாஸனின் பிரபல "பூமியும் உருண்டை, லட்டும் உருண்டை" வசனம் இந்த படத்தில்தான்.

இந்த கணனியில் ஸ்பீக்கர் இல்லாதததால் பாட்டை கேட்கவில்லை. சுட்டியை பார்த்து'அதிகாலை நேரமே..'பாடல் என்று நினைத்து எழுதுகிறேன். தப்பாய் இருந்தால் மன்னிக்கவும்.
rajkumar said…
இனிய பிரகாஸ்.

அச்சு வாசகர்கள் விரும்பினாலும் சிக்கலான கேள்வியை கேட்பதற்கு வாய்ப்பி கிடைப்பதில்லை/ அல்லது பத்திரிக்கையினால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இனையத்தில் அந்த மாதிரி வடிகட்ட முடியாது. கேள்விகள் கேட்கும் உரிமையை சுலபமாக அளித்து விடுகிறது. அதனால்தான் கேள்விகளிகன் தாக்கத்தில் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் சங்கடப்பட்டு போகிறார்கள்.

எவ்வளவு நாலைக்குத்தான் இந்த இடக்கை புறந்தள்ளல் தொடர்கிறது என்று பார்க்கலாம்.

வாழ்த்துக்கள்

அன்புடன்

ராஜ்குமார்
//என்ன பிரகாசு, நீங்களுமா??!!//

இதுக்கு என்ன அர்த்தம் ஜெயஸ்ரீ?

மரத்தடி குழுமத்தை நடத்துபவர்கள் என் நண்பர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.பைட்டுகளாக யாஹ¥ குழுமத்திலும், மரத்தடி சர்வரிலும் இருக்கும் எழுத்துக்கள் பரவலான வாசிப்பைப் பெறும் அளவுக்கு இலக்கிய விவாத நூலாக, வந்திருப்பதில், இணையக்குழுகுண்டு சட்டியில் மட்டுமே , குதிரையோ, கழுதையோ ஓட்டி பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறவன் என்கிற முறையில் எனக்கு அளவிலாத மகிழ்ச்சி என்பதிலும் எனக்கு ஐயமில்லை. ஒருக்கால் நான் கிண்டல் செய்கிறேன் என்று நினைத்திருக்கக் கூடும். இல்லை. அதை நான் லிட்டரலாகத்தான் சொன்னேன்.
jsri: ரெண்டு நாளா மரத்தை சுத்தி வந்து பாட்டுப் பாடலை :-). அதான் சட்டுன்னு விளங்கலை (:. நீங்க, பிரசன்னா, மதுமிதா, எம்.கே.குமார். பாஸ்டன் பாலாஜி, லாஸ் ஏஞ்சல்ஸ் சுவாமிநாதன், ஜிதிராவிட், கே.வி.ராஜா, உஷா ஆகியவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றன
எனக்கே சற்று சங்கடமாகிவிட்டது. கேள்விபதில்களை மரத்தடியிலும், முன்னுரையின் ஒரு பகுதியை மட்டும் படித்துவிட்டு இப்படி அதிகப்பிரசங்கித்தனமாக எழுதிவிட்டோமோ என்று. பின்பு நினைவு வந்ததுபோல ஒரு பழைய கட்டுரையின் இரண்டாம் பாகத்தைத் திரும்பத் திரும்பப் படித்துச் சற்றுச் சமாதானமடைந்தேன், ஒரு கால் முன்னால் போனால் மறு கால் பின்னால் போகாதென்று ;)
http://www.thinnai.com/arts/ar1222011.html
SnackDragon said…
ஜெயமோகனச்சாமி குறிச்த்து எழுதிய பதிவை காக்கா தூக்கிப்போனதால் , இங்கே மறு வெளியீடு;

நன்றி : ப்ரகாஷ் க்ரோனிகிள்
இதை குறித்து மாண்ட்றீசர்(என்னயா பேரு இது டைப் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது? :)) கொஞ்சம் காரசாரமாய் விவாதித்து/விமரிசித்து உள்ளார். அவரிடமிருந்தும் பிரகாஷிடம் இருந்தும் நான் லேசாய் வேறுபடுகிறேன். அதுபோலவே ஜெயமோகனிடமிருந்தும்.


1. முதலில் ஜெயமோகன் எழுதியதாலே இது இலக்கிய விமர்சனம் ஆகிவிடாது. நான் இதை ஜெயமோகனின் அவதானிப்பு அல்லது
கணிப்பு (கெஸ் வொர்க்) என்றுதான் சொல்வேன். ஜெயமோகன் இணையதளங்களில் ஊடாடி விவாதங்கள் செய்து கொண்டிருந்தது,திண்ணையில் கொஞ்சம் அதிகமாகவே எழுதியது(தூங்கியது :)) போன்றவைகளை நிறைய இணைய நண்பர்கள் (என்னைப்போலவே) அறிவர். அதன் பேரிலேயே இந்த கணிப்பை எழுதியிருப்பார் என்று நம்புகிறேன்.


2. இதில் ஜெயமோகன் சொல்வது என்ன, (ஜெயமோகனின் கணக்குப்படி தீவிர) தீவிர இலக்கிய வாசகர்கள் குறைவு என்று.
இதை சிறுபத்திரிகைகளில் பங்கு பற்றும் இளைஞர்களோடு/எழுத்தாளர்களோடு ஒப்பீடு செய்து எழுதியுள்ளார். [இது ஏன் என்ற கேள்வியும் உள்ளது;]இந்த இடத்தில் ஜெயமோகன் சொன்னதற்காகவே மறுக்கலாம் என்று பார்த்தால், நிலைமை அப்படிதான் உள்ளது என்றுதான் என் இன்றைய மனநிலை சொல்கிறது. இதை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்று கேட்டால், ஜெயமோகன் சொல்வது போலவே இணைய வாசகர்கள் ஒரு முழுமையான வாழ்க்கை சூழலில் உள்ளார்கள் அது போலவே அடித்தட்டு அல்லது அடிமட்ட வாழ்க்கை குறித்தஅவர்களது வாசிப்பு குறைவு என்றுதான் எனக்கு படுகிறது. ஆனால் அதற்கு காரணமே அவர்கள்து அதே வாழ்க்கைதான்/சூழ்ல் என்று நினைக்கிறேன். [அப்ப எங்கேதான் மாறுபடுகிறேன் என்று கத்தாதீர்கள்] இதை ஜெயமோகன்,அவ்ர்களுடைய ஒரு குற்றம் போல சொல்கிறார் என்பதைத்தான் நான் ஏற்றுகொள்ளவில்லை. என்னைப்பொறுத்தவை இதற்கு காரணங்கள் வேறு.

இதை ஜெயமோகனை தள்ளிவிட்டு, சாதரணமாய், ஒரு தீவிர இலக்கிய செறிவார்ந்த பதிவு[கவிதையோ, கட்டுரையோ] ஒன்றுக்கு கிடைக்கும் மதிப்பு/பின்னூட்டம் கருத்து சார்ந்த விவாதம் எழுவது என்று பார்த்தால் புரியும். (இங்கும், தமிழ் இணயம் முழுதும் அப்படி என்றோ/எல்லா வாசகர்களும் அப்படி என்றோ என்னால் ஜெயமோகன் போல் மட்டையடிக்க முடியாது)
இதை வலு சேர்ப்பதற்காய், இங்கு பதிவு எழுதும் எத்தனையோ பதிவுகளில்(சீரியஸான பதிவுகளில்), சமூக சமன்பாடு குறித்தோ, தலித்தியப்பார்வை குறித்தோ, சமூக சீர்கேடுகளைகுறித்த சாடல்களையோ எழுதும் பதிவுகளை எண்ணி சொல்லிவிடலாம். (300 -ல் 20 இப்படி என்ற தோராயக்கணக்கை கொண்டுதான், மேலும் தமிழ் மணம் மட்டுமே இணையம் அல்ல, ஆனால் சாம்ப்ளிங் என்று கொள்ளலாம்) இங்கு யாருமே அப்படி இல்லை என்று சொல்லவில்லை. மாறாக சீரியஸான பதிவர்கள் சிலர் கூட பழமை வாதங்கள், ஒதுங்கி நிற்றல், சமூக அமைப்புக்குறைகளுக்கு வலு சேர்க்கும்சில பதிவுகள் எழுதுவதை கூட காணமுடியும். ஆனால் இவர்களை , ஒரு வித வாசக மனங்களின் படிகளில் ஏறுபவர்களாகதான் நான் பார்ப்பேனே ஒழிய , இவற்றை இலக்கியம் அல்ல என்று ஜெயமோகன் போல் சொல்ல மாட்டேன். தீவிரம் குறைவு என்றும் சொல்லமாட்டேன்.

நான் சொலவ்தில் ஏற்பில்லை என்றால், நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு இலக்கியத்தில் இருந்து ஒரு பகுதியை பதிவாய் இட்டுப்பார்த்து அதன் வரவேற்பு என்ன என்பதை குறித்து கொஞ்சம் ஹோம்வர்க் செய்யுங்கள். பிற பதிவுகளோடு ஒப்பீடு செய்யலாம்.


3. பிரகாஷ் சொல்லும் "இடக்கை புறந்தள்ளல்" என்று ஜெயமோகன் சொல்வதாய் என்னால் பார்க்க முடியவில்லை.
காரணம் இது இலக்கிய விமரிசனமே இல்லை. பார்க்கவும் அவசியம் இல்லை என்பது வேறு உள்ளது.

4.மாண்ட்றீசர் சொல்வதை , இணையத்தில் எழுதுபவர்களின் சுதந்திரத்தை ஜெயமோகன் பறிப்பது போல் எழுதியுள்ளதாக வாசிக்கமுடிகிறது. அப்படி எனில் மாண்ட்றீசர், ஜெயமோகன் எழுதியதற்கு ,அதிகமாக மதிப்பளித்து எழுதுகிறார் அல்லது புரிந்து கொள்கிறார் என்று தோன்றுகிறது.


5.நான் புரிந்து கொண்டவரையில், சிறுபத்திரிகை தொடும் தளங்களை இணைய வாசகர்கள்/எழுத்தாளர்கள் தொடுவதில்லை.
இதற்கு காரணம் என்று நான் நினைப்பது, இவற்றின் தளங்கள் வேறாய் அமைவதிலிருந்து ஆரம்பித்து, இன்றைய சூழல் என்பதில் முடிகிறது எனலாம்[இதை இன்னும் விளக்கலாம்]. இங்கு ஜெயமோகனின் வாசிப்பையும்,எழுத்தையும் விட அவரது இணைய அறிவு,
அனுபவமும் மிகக்குறைவு என்பது யோசிக்கவேண்டிய ஒன்று.

மேலும் அதற்கு காரணம் தீவிரம் இல்லை என்று ஜெயமோகன் மட்டையடிக்கிறார்[கடுமையாய் சொன்னால் , நீங்கள் எல்லாம் இலக்கியத்துக்கு சம்பந்தமே இல்லை என்கிறார் எனலாம்].
மாண்ட்றீசர் "நீ யாருய்யா எங்களை சொல்ல" என்று சீறுகிறார்.
நான் சொல்வது , அது இலக்கிய விமர்சனமே இல்லையென்பது.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்