Sivappathigaram - Review

உஷார்! கதை தெரிந்து விடும். படம் பார்க்க நினைக்கிறவர்கள் படிக்க வேண்டாம்.

ரமணா, அன்னியன் வரிசையில் வன்முறை மூலமாக நாட்டைத் திருத்த முயலும் மற்றொரு திரைப்படம்.

ஒரு கல்லூரி நடத்தும் கருத்துக்கணிப்பில் பாதிக்கப்பட்ட இடைத் தேர்தல் வேட்பாளர் சண்முகராஜன், மாணவர்கள் மீது அவிழ்த்து விடும் வன்முறையில், பலர் இறந்து விடுகிறார்கள். பழிவாங்குவதற்காகவும், தேர்தல் என்கிற அமைப்பை சரி செய்வதற்காகவும், நாயகன் விஷால், தன் ஆசிரியர் ரகுவரனின் துணையுடன் , அடுத்து வரும் பொதுத்தேர்தல் வேட்பாளர்கள், அனைவரையும் போட்டுத் தள்ளுகிறார். அதனால், தேர்தலில் யாரும் நிற்க முன்வராமல், ஒரு குழப்ப நிலை நீடிக்கிறது. தேர்தலும் தள்ளிவைக்கப் பட, ஒரு சிபிஐ ஆப்பீசர் ( உபேந்திர லிமாயே ), வந்து, சினிமா வழக்கப்படி, மூன்று காட்சிகளுக்குள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுகிறார். மதுரை அழகர் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் உள்துறை அமைச்சர் ராஜன் பி தேவை போட்டுத் தள்ளும் உச்சகட்ட காட்சியில், ஹீரோ, கேமராவுக்கு முன் விஜயகாந்த் ஸ்டைலில் நீளமாக தேர்தல் பற்றிய கருத்துக்களை பேசுவதோடு படம் முடிகிறது.

நடுவிலே ரகுவரனின் மகள் மம்தா மோகன்தாஸுடன் மைல்டான ரொமாண்டிக் டிராக். வெறும் பாடல்காட்சிகளுக்காக வந்து , நடுவிலேயே காணாமல் போகிறார்.

அரைத்த மாவுதான் என்றாலும், பொறுமையாக உட்கார்ந்து பார்க்க வைப்பது, கரு.பழனியப்பனின் தெளிவான ( லாஜிக் குறைகள் தவிர்த்து ) திரைக்கதையும், அங்கங்கே கைதட்டல் பெற்றுத் தரும் கூர்மையான வசனங்களும் தான்.

நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சிக்காக ஒரு கிராமத்துக்கு, ரகுவரனும் விஷாலும் வருவதாகத் துவங்கும் படம், முதல் பதினைந்து நிமிடங்கள் வரை, கதைக்குள் வராமல், ஆராய்ச்சி என்று ஜவ்வடிக்கும் போது, பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்து கதையை டாப் கியருக்குத் தூக்குகிறது. ப்ளாஷ்பாக் காட்சியில், நாற்பது மாணவர்களை, கேண்டீனில் அடைத்து உயிருடன் கொளுத்தும் காட்சியும், அதைத் தொடர்ந்த ஆக்ஷன் சீக்வன்ஸும் அருமையாகப் படமாக்கப் பட்டுள்ளது.

படத்தில் முழுமையாக ஸ்கோர் செய்வது ரகுவரன் தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனதில் பதிகிறமாதிரியான அழுத்தமான பாத்திரம்.

வேட்பாளர்களைக் கொலை செய்து பயமுறுத்தினால், தேர்தல் சீர்திருத்தம் ஏற்படும் என்று குழந்தைத் தனமாக நம்புவதை எல்லாம் படமாக எடுக்காமல், அடுத்த படத்திலாவது, கரு.பழனியப்பன் ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புவோம்.

Comments

Pavals said…
//அடுத்த படத்திலாவது, கரு.பழனியப்பன் ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுப்பார் என்று நம்புவோம்.//

ம்ம்..

நிறையா அழுத்தமான வசனங்கள்.. ஆனா வெளிய வந்ததுக்கு அப்புறம் பெருசா ஒன்னுமே ஞாபகத்துல இல்ல..

சாம்பிள் : "நம்ம எல்லாரும் மரத்தை வெட்டும் சிற்பம் செய்யனும்னு தான் ஆசைப்படுறோம்.. ஆனா மரவெட்டியாவே வாழ்க்கை முடிஞ்சு போகுது.."

அதே மாதிரி நாட்டுபுற பாடல்களை அம்போன்னு விட்டுட்டாங்களே..

கஞ்சா கருப்பு பத்தியும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்.. (நம்ம முன்னாடி உக்காந்த சிட்டுக எல்லாம் அவர் வர்ற காட்ச்சிய கைப்பேசியில படம் எடுத்து வச்சுகிட்டாங்கன்னா எடுத்தாங்கன்னா பாருங்க.. )
ராசா, அது கெடக்கட்டும் , கண்ணாலம் கட்டின கையோட இந்த மாதீரி படத்துக்கெல்லாமா கூட்டிட்டுப் போறது? :-)

இல்லே தனியாப் போனீரா? :-)
Pavals said…
//இந்த மாதீரி படத்துக்கெல்லாமா கூட்டிட்டுப் போறது? :-)// ஹீ.. ஹி.. அம்மணிக்கு விஷால் கொஞ்சம் புடிக்கும்.. நம்ம சாயலாம்.. அதான்..
Sud Gopal said…
முதல் பாதியில் தொய்வான திரைக்கதை,நீ...ளமாயிருக்கும் பல வசனங்கள்,தேவையில்லாத இடங்களில் பாடல் செருகல்கள்,க்ளைமாக்ஸ் பாடல் இல்லாமை இப்படி எல்லாமும் சேர்ந்து ஒரு அருமையா வந்திருக்க வேண்டிய படத்தை சொதப்பலாக்கியிருக்கு.

//நிறையா அழுத்தமான வசனங்கள்//

அதே...அதே...

முதல் தலைமுறை மாணவர்கள் நல்லாப் படிப்பதன் காரணம்,அன்பே சிவம்னு வரும் க்ளைமாக்ஸ் வசனம் போன்றவை மனசில நிக்குது.

பாடல்களில் வித்யாசாகர்,கோபிநாத் கலக்கியிருக்காங்க.பழனியப்பன் தான் படமாக்கிய விஷயத்தில கோட்டை விட்டுட்டார்.அதுவும் விஷால் அறிமுகமாகும் அந்தப் பாடலில் ஷர்மிலியா???
பேட் டேஸ்ட் டைரக்டர் சார்...

Popular posts from this blog

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்

Mani Ratnam's Guru - Review

வரைவின் மகளிர் from பாண்டவபுரம்