லேட்டஸ்ட் நிலவரம் - ரஜினி ராம்கியிடமிருந்து....

நாகை மாவட்டம் தான் மிக அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றது. உயிர்சேதங்களும் மிக அதிகம். கரையோரமாக ஒதுங்கி இருக்கும் உடல்கள் மணலில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

நம் வலைப்பதிவு நண்பர்கள் நன்கொடை அளித்த பொருட்கள் பத்திரமாக வந்து சேர்ந்தன. அவற்றில் பெருமளவு நாகையைச் சென்றடைந்து விட்டது. நாளை ராம்கி நாகைக்குச் செல்கின்றார். தற்போது முகாம்களில் தங்கி இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான முக்கியத் தேவைகள், உணவு, உடை, மருந்துகள். நம் வலைப்பதிவு நண்பர்கள் மூலமாகவும், இன்னும் பல இடங்களில் இருந்தும் இவை வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைக்கு, பொருட்கள் சேகரிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ( பணம் தவிர்த்த இவ்வுதவிகளை, தங்கள் பகுதியில் இருந்து செயல்படும் தன்னார்வலர்களிடம் கொடுத்தால், அவை, பாதிக்கப்பட்ட வேறு மாவட்டங்களுக்கு அளிக்க ஏதுவாக இருக்கும் ).

பொருட்கள் குவிந்தும், அவற்றை விநியோகம் செய்யத் தேவையாக ஆள் பலம் அங்கு இல்லை. மேலும் களப்பணிகளைச் செய்யவும் ஆட்கள் குறைவாக இருக்கின்றார்கள். உடல் உழைப்பை நல்க விரும்பும் தன்னார்வலர்கள், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். நேற்று பள்ளி மாணவர்களும் சாரணப் படையினரும், என்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இப்பணியில் ஈடுபட்பட்டார்கள். அப்படி வேலை செய்த மாணவர்களில் ஒருவருக்கு , திடுமென உடல் நலம் சரியில்லாமல் போகவும், கொடிய நோய்கள் பரவுகின்றன என்ற வதந்தியால் பெற்றோர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பிவிட்டது. நேற்றைக்கு செய்த அதே வேகத்தில் களப்பணி தொடர்ந்து நடந்திருந்தால், நாளைக்கு வேளை முடிந்திருக்கும். இந்தச் சுணக்கத்தினால், இன்னும் ஆபத்து தான் அதிகம்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களோ அல்லது தொடர்பு உடையவர்களோ யாராவது இந்தப் பதிவைப் படித்துக் கொண்டிருந்தால், மற்ற உதவிகளுடன், வேலை செய்ய ஆட்களும் ( ஓரிரண்டு நாட்களுக்கு மட்டுமாவது ) தேவைப்படுகிறார்கள் என்ற செய்தியைக் கொண்டு செல்லவும்.
பண உதவி செய்ய விரும்பும் நண்பர்கள், கீழ்க்கண்ட உரலைச் சுட்டினால், எந்த வழியாக, யார் யாருக்கு, எந்த எந்தக் காரணங்களுக்காகப் பணம் அளிக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்

http://tsunamihelp.blogspot.com
http://tsunamirelief.blogspot.com

நாளைக்கு ராம்கியுடன் தொடர்பு கொண்டு பேசியபின் மற்ற விவரங்களை அளிக்கிறேன்.

[பி.கு : இக்கட்டான ஆறுதல்களாகவும், நன்கொடையாகவும் பொருட்களாகவும் உரிய நேரத்தில் அளித்த நம் வலைப்பதிவு நண்பர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். அவகாசம் கிடைக்கும் போது இது பற்றி சாவகாசமாக]

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

மிக்ஸர் - I