[ ஸ்பாய்லர் உண்டு ]

நிஜ வாழ்க்கை நாயகர்கள் மீது மணிரத்னத்துக்கு இருக்கும் பிரேமை அலாதியானது. வேலுநாயக்கர், ஆனந்தன், தமிழ்ச்செல்வன் என்று நிழல் உலகத்தில், வரதராஜ முதலியார்,எம்ஜி.ஆர்.கருணாநிதி போன்ற்வர்களுக்கு அச்சு அசலான பிரதியை உருவாக்குவதில் மணிரத்னம் சில சமயங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். குரு படத்தில், அவர் முயன்றிருப்பது, இந்திய வர்த்தக உலகத்தில் கொடிகட்டிப் பறந்து மறைந்த தீரஜ்லால் ஹீராலால் அம்பானியின் செலூலாய்ட் பிரதியை.
கட்டுபடுத்தப்பட்ட பொருளாதாரத்தில் வர்த்தகத்தைத் துவக்கி, வெற்றிகரமாக நடத்தி, பின்னர் தாராளமயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திலும், வெற்றி வாகை சூடியவர் அம்பானி. அவர், 'நல்லவை' என்று அகராதி குறிப்பிடும் அர்த்தத்துக்கு ஈடான கொள்கைகளை வைத்திருந்தவர் இல்லை என்றாலும், அதே அகராதி, 'சாமர்த்தியம்' என்று குறிப்பிடும் அர்த்ததுக்கு ஈடாக குணங்களைக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட, நல்லவரா கெட்டவரா என்று எளிதிலே கணிக்க முடியாத அம்பானியை, கதையை வைத்து கதை பின்னுவது, அப்படி ஒன்றும் கம்பசூத்திரமல்ல, மணிரத்னத்துக்கு,
நிஜத்திலே, ஏடன் செல்லும் அம்பானியை, திரையில் துருக்கிக்கு அனுப்புகிறார். நிஜத்தில் கோகிலா பென் இங்கே சுஜாதா. அங்கே திருபாய். இங்கே குருபாய். பெட்ரோல் பங்கில் வேலைசெய்து, சம்பாதித்து, பணம் சேர்த்து இந்தியா வந்து சில்லறை விற்பனை , பிறகு ஏற்றுமதி இறக்குமதி, பின்னர் தொழிற்சாலை, என்று நிஜத்தில் அம்பானி வாழ்க்கை வரலாறு மொத்தமும் திரையில் காட்சிகளாக விரிகிறது.
பாம்பே டையிங் 'வாடியா' குடும்பத்துடனான பிரச்சனை, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையுடனான விவகாரங்கள், ஸ்டாக் மார்க்கெட் சர்ச்சை, அரசியல்வாதிகளுடனான நெளிவு சுளிவுகள், மும்பை ஸ்டேடியத்தில் நடந்த annual general meeting, விசாரணைக் கமிஷன், உடல்நலக்குறைவு. என்று அம்பானியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், வருகின்றன, சில சமயம் விரிவாக, சில சமயம் மேலெழுந்தவாரியாக.
ஏதாவது பிரச்சனை கிளம்பப் போகிறது என்று நினைத்தோ என்னமோ, அனில் மற்றும் முகேஷ் அம்பானியை பெண் கதாபாத்திரமாக்கி, அமுக்கி விட்டார்.
பெரிய சக்திவேலிடம், சின்ன சக்திவேல், ' நீங்க நல்லவரா கெட்டவரா' என்று கேட்டது போல, குருகாந்த் தேசாயை, நல்லவரா கெட்டவரா என்று யாரையாவது கேட்க வைக்காமல்,விசாரணைக் கமிஷனில்,மனைவியை வைத்து பதில் சொல்ல வைப்பதில் ஒரு விதமான சாமர்த்தியம் தெரிகிறது. குஜராத்திகளின் வர்த்தகக் திறமை, உலகறிந்த விஷயம்.
இந்தப் படத்தை தன் தோளிலே வைத்து முழுக்க முழுக்கச் சுமப்பவர் குருகாந்த் தேசாய் பாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்து காட்டியிருக்கும் அபிஷேக் பச்சன் தான். மணிரத்னத்தின் படங்களைப் பார்ப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் கூட, அபிஷேக்கின் நடிப்பை பார்க்க வேண்டும். கிராமத்தில் இருந்து வந்து, டை கட்டத் தெரியாமல், ஆங்கிலம் பேசத் தெரியாமல், லாபம் பண்ணுவதையே குறியாகக் கொண்டு, அவ்வபோது உணர்ச்சி வசப்படும் கதாபாத்திரத்தில் மிக அழகாகச் செய்திருக்கிறார். பிற்கால நடுத்தர வயது கதாபாத்திரத்துக்கு, ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருந்தாலும், இளவயதுத் தோற்றத்தில் படு கேவலமாக இருக்கிறார்.
மற்றபடி, காட்சியமைப்பு, ஒளிப்பதிவும், அவ்வப்போது வந்து விழுகிற ஒன்லைனர்களும், வழக்கம் போலவே மணிரத்னம் ஸ்டைல். பத்திரிக்கை ஓனராக வரும், மிதுன் சக்கரவர்த்தியும், புலனாய்வு ரிப்போர்ட்டராக வரும் மாதவனும், அவருக்கு ஜோடியாக வரும் வித்யா பாலனும் , பிற கதாபாத்திரங்கள் இல்லாத குறையைப் போக்குகிறார்கள்.
அம்பானியின் வாழ்க்கை வரலாறு பற்றி ஓரளவாவது தெரிந்திருந்தால், படம் சுவாரசியமாக இருக்கும். ( படத்தின் கதாபாத்திரங்கள், நிஜத்தில் யார் என்று ஊகிப்பது ஒரு தனி கிக் ). இல்லாமல், ஸ்டாக் மார்க்கெட், இம்போர்ட் சப்சிடி, மெஷினரி எக்ஸ்போர்ட், பர்மிட் ராஜ் போன்றவை பற்றி அறியாதவர்கள்,
' என்னாத்த படம் எடுக்கிறாம்பா.. ஒண்ணுமே பிரியலே போ"
என்று திட்டிக் கொண்டே வருவார்கள் என்பது மட்டும் உறுதி.
என் ரேட்டிங்க : 6/10
[image courtesy : nowrunning.com]