காற்றில் கலந்தே விட்ட பேரோசை...

எனக்கும் புரிகிற மாதிரி எழுதுகிற நவீன இலக்கியவாதிகள் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருந்தவர் சு.ரா. Pulmonary fibrosis நோயின் காரணமாக அவர் இல்லாமலே போய்விட்டாலும் கூட குறிப்பிட்ட அந்த முதலிடம் என்றுமே வெற்றிடமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

இணையத்துக்குள் நுழைந்த புதிதில், ( ஆகஸ்ட்/செப்டம்பர் 2002) நண்பர்களுடன் சந்திப்பு என்கிற சாக்கில் முதன் முதலாக இலக்கியச் சந்திப்பு ஒன்றில், சு.ராவைப் பார்த்ததும், கேள்வி நேரத்திலே, துண்டுக்காகிதத்திலே எழுதி வைத்து அபத்தமாகச் சில கேள்வி கேட்டு, அதற்கு அவர் பொறுமையாக பதில் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கும் கூட, நவீன இலக்கியத்தின் முகவரியாக இருக்கும் " ஜே.ஜே.சில குறிப்புக்கள்" நாவலைப் பற்றி நண்பர்களுடன் பேசிப் பேசி, எழுதி எழுதி மாய்ந்தது நினைவுக்கு வருகிறது.

சு.ராவின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

சு.ரா குறித்து சென்ற வருடம் ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி ..

சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்


முன்னுரை

சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவும் அதன் எளிமைக்காகவும் தான் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன், என்றால், சுந்தர.ராமசாமியை, வேறு தளத்தில் வைத்து வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், என் நோக்கம் அதிர்ச்சி ஏற்படுத்துவது அல்ல.


நகைச்சுவையும் இன்னொன்றும்

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு, முதன் முதலாக ஜே.ஜே.சில குறிப்புகள் என்ற நாவலை வாசித்த போது ( அப்போது அந்த நாவல் பற்றி சுஜாதா எழுதிய ஒரே ஒரு விமர்சனக் குறிப்பை மட்டும் வாசித்திருந்தேன்), அந்த நாவலின் கட்டுமானமும், செய்நேர்த்தியும், என்னை ரொம்பவே பரவசப்படுத்தியது. மீள் வாசிப்புகளின் போதுதான், அது ஒரு நாவல் மட்டுமல்ல, ஒரு புத்திசாலித்தனமான கார்ட்டூன் சித்திரம் என்று புரிந்தது. என்னுடைய இந்த கண்டுபிடிப்பினை, சுந்தர.ராமசாமியை, பீடத்தில் வைத்து தொழுது கொண்டிருக்கும் ஆருயிர் நண்பர்கள் சிலரிடம் சொல்லி செமர்த்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு. சுந்தர.ராமசாமியை வாசிப்பது, மனமகிழ்ச்சி கொள்வதற்காக மட்டும் தான் என்பது, பஞ்சாபில் வாஷிங் மெஷினை, லஸ்ஸி அடிக்க உபயோகப்படுத்துவதற்கு ஈடான ஒரு பொருத்தமற்ற காரியம் என்பது அவர்களது கணிப்பு. சுந்தர.ராமசாமியின் எழுத்துக்களை, லாகிரி வஸ்துக்களின் பட்டியலில் சேர்க்கவே கூடாது என்பது அவர்களின் திட்டவட்டமான முடிவு.


ஜே.ஜே யில், நீரில் வாழும் பிராணி படியேறி மாடிக்கு எப்படி வந்தது என்று வியக்கும் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட், உக்கிரப்பெருவழுதி, சிவகாமியம்மாள் சபதம் பற்றிக் கவலைப்படும் ஜே.ஜே, ஜே.ஜே வை சே சே என்றுதான் போடுவேன் என்று அடம்பிடிக்கும் தமிழ்த் தீவிரவாதி-தாளிகை ஆசிரியர் ஆகிய நால்வர் பற்றி எப்போது வாசிக்க நேர்ந்தாலும், வாய்விட்டு சிரிப்பதுண்டு. அந்த சமயத்தில் அந்த ஆருயிர் நண்பர்கள் கூட இருந்தால், என்னைக் கடுமையாகப் பார்த்து, என் கையில் இருக்கும் புத்தகத்தை பிடுங்கிவிட்டு, " மாணவர் தலைவர் அப்புசாமி " அல்லது வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தை என் கையில் திணிப்பார்கள்.

நான் வாசிக்க வேண்டிய புத்தகத்தை எப்போதுமே மற்றவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் என்ற முடிவுக்கு நான் வந்ததற்கு அந்தச் சம்பவம் தான் முதல் காரணம். இரண்டாம், மூன்றாம், நான்காம் காரணங்களும் இருக்கின்றன. அவை பிறகு.

தர்க்கமும் குதர்க்கமும் சில நண்பர்களும்

சுந்தர.ராமசாமியை, நான் அவருடைய எளிமைக்காகவும், அலங்காரமற்ற நடைக்காகவும், நகைச்சுவை மதிப்புக்காகவும் தான் வாசிக்கிறேன் என்பதை, அவர்களால் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. எனக்கு விளங்காமல் இருக்கும் பல விஷயங்களில் மேற்படி சமாசாரமும் ஒன்று. இது போலவே ஜெயமோகனின் ஆக்கங்களில் என்னைப் பெருமளவு கவர்ந்தது, அவர் எழுதிய 'நான்காவது கொலை' என்ற தொடர்கதைதான் என்று ஒருமுறை சொல்லி, ஜெயமோகனின் தீவிர விசிறி ஒருவரிடம் வாங்கி கட்டிக்கொண்ட கதை பிறகு எப்பொழுதாவது. சுந்தர.ராமசாமியின் எழுத்துக்களில், சிலாகிக்கப் படவேண்டிய சமாசாரங்கள் எவ்வளவோ உண்டு என்றும், அதிலே பொழுது போக்கு அம்சத்தை மட்டும் தேடிப் படிப்பது தகாத செயல் என்பதை ஆரம்பமாகக் கொண்டு எங்கள் விவாதம் துவங்கும். மேற்கண்ட அறிக்கையை தாக்கல் செய்தவன் ஒரு லட்சியவாதி. நான் ஒரு அலட்சியவாதி. அவனுக்கு சமூகத்தைப் பற்றி பல நல்ல கருத்துக்கள் இருந்தன. wishful thinking என்பார்களே அது மாதிரி. சுந்தர.ராமசாமிக்கும் சமூகத்தின் மீதான அக்கறை இருந்தது ஆகவே, அவரும் ஒரு லட்சியவாதி என்று சொல்லி, அதை நிரூபிக்க முயல்வான். தீபம்.நா.பார்த்தசாரதியும் சு.ராவும் நண்பர்கள் என்பதாலேயே, அவரை லட்சியவாதம் பழகும் ஒரு எழுத்தாளர் என்று சொல்வது அபாண்டமாகத் தோன்றும் எனக்கு. " எனக்கு நா.பாவின் எழுத்துப் போக்கு ஏற்புடையது அல்ல" என்று சு.ராவே ஒரு முறை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் என்று விளக்க முயற்சி செய்வேன். நவீன இலக்கியத்தில் அழுத்தமான தடத்தை பதித்த யதார்த்தவாதியான சு.ரா அவர்களை, லட்சியவாத எழுத்தாளர் சட்டகத்தில் அடைத்து விவரம் புரியாமல் பேசும் போது, மேற்கொண்டு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிப்பேன்.

விவாதம் சூடுபிடித்து, பின் கீழ்க்கண்டவாறு செல்லும்.

1. புளிய மரத்தின் கதையை வாசித்திருக்கிறேனா?

2. குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என்ற நாவலை வாசித்திருக்கிறேனா?

3. காற்றில் கலந்த பேரோசை, விரிவும் ஆழமும் தேடி என்ற இரண்டு கட்டுரை நூல்களையும் வாசித்திருக்கிறேனா?

இதற்கு என் பதில்களாக, முறையே, இல்லை, இல்லை, இல்லை என்றுதான் இருக்கும். அப்படியானால் சுந்தர.ராமசாமியின் எழுத்துக்களைபற்றிய கருத்து சொல்லத் தேவைப்படுகின்ற குறைந்த பட்ச தகுதி கூட எனக்கில்லை என்ற முடிவுக்கு நண்பர்கள் அனைவரும் வருவார்கள்.

சுஜாதாவின் எழுத்துக்கள் அனைத்தையும் உருப்போடுபவன் என்ற ஒரு ஊனம் என்னிடம் இருக்கின்றது. அந்த ஊனத்தை மையப்புள்ளியாக வைத்து, விவாதம் உச்சகட்டத்தை அடையும். பொதுவாக ஊனமுற்றோரை, கருணையுடன் பார்ப்பதுதான் நம் தமிழ் மரபு [அனைத்து சமூகத்துக்கும் பொருந்தக் கூடிய யதார்த்தமான ஒரு விஷயத்தை, தமிழ் மரபின் மீது சுமத்தி, நம் மரபின் 'பின்பாரத்தை' :-) ஏற்றிவிடுகின்ற தீயவழக்கம் என்னிடமும் உண்டு ] என்றாலும் கூட, அந்த மரபினை எனக்குத் தெரிந்த இலக்கிய நண்பர்கள் யாரும் கடைபிடிக்கவில்லை. சுந்தர.ராமசாமியின் ஒரே ஒரு படைப்பைப் பற்றி எனக்குத் தோன்றிய கருத்தை நான் சொல்ல, நான் ஏன் அவரது மற்ற படைப்புகளைப் படித்திருக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. ஒரு படைப்பைப் பற்றிய வாய்மொழி/எழுத்து வடிவ அபிப்ராயம் சொல்லத் தேவையான தகுதி, அவர்கள் வசம் இருந்த 'இது காறும் படித்திருக்க வேண்டிய /தவிர்த்திருக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை' அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்பது அவர்கள் தீர்ப்பு.

தொடர்ந்து நடந்த இந்த விவாதங்கள் எனக்கு சலிப்பூட்டின. மனச்சோர்வு அளித்தன. இதை தவிர்க்க சில உபாயங்களை கைக்கொண்டேன்.

1.சிற்றேடுகளில், சுந்தர.ராமசாமியின் ஏதாவது ஒரு ஆக்கத்தை வாசித்தால், அதை நான் வாசித்துவிட்டேன் என்று வௌ¤யே பறைசாற்றிக் கொள்ளாமல் இருப்பது.

2.அப்படி வாசிக்கும் நேரத்திலே கையும் களவுமாக பிடிபட்டுவிட்டால், யாரும் பார்க்குமுன்னர், அதை கீழே போட்டுவிட்டு , டாடா பிரஸ் எல்லோ பேஜஸ் என்ற மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கும் புத்தகத்தை சுவாரஸ்யமாகப் படிப்பது.

3.நானே போட்ட காபியை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி, அவர்களைத் துரத்தி அடித்து விட்டு, சுந்தர.ராமசாமியின் உலகில் மீண்டும் சஞ்சரிப்பது.

இந்த வழிமுறைகள் அனைத்துமே நல்ல பலனைக் கொடுத்தன என்றாலும், படித்து விட்டு, அதைப் பற்றி அசை போட முடியாமல் இருக்கும் நிலைமை என்னை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிற்று. இனி சுந்தர.ராமசாமியின் நூல்கள் எவற்றையும் வாசிக்கவே கூடாது என்ற முடிவுக்கும் வந்திருந்தேன். தமிழ் சினிமாக்கள் பிரபலமாக்கிய ' பிரசவ வைராக்கியம் ' போலத்தான் என்னுடைய வைராக்கியமும் என்பது சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருக்கும் 'நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு' சென்ற போது தெரியவந்தது.

Comments

//எனக்கும் புரிகிற மாதிரி எழுதுகிற நவீன இலக்கியவாதிகள் பட்டியலில் முதலாவதாக இடம் பெற்றிருந்தவர் சு.ரா//

ditto here. It IS a loss!

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

மிக்ஸர் - I

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?