குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை

தயாநிதி மாறனின் இலவச அல்வா - இலவச சிடி குளறுபடிகள் - ஓர் ரிப்போர்ட் - யுவான் சுவாங்

கம்ப்யூட்டர் மயமாகி வரும் இந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தால்தான் கம்ப்யூட்டரை இயக்க முடியும் என்று பலரும் நினைத்து வருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றி தமிழ் மட்டுமே தெரிந்தவர்களும் கம்ப்யூட்டரை முழுமையாகப் பயன்படுத்த வகைசெய்ய மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் என்றவுடனே எதிலும் கலக்கும் அரசியல் இதிலும் கலந்துவிட்டிருக்கிறது.தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற கோலாகலமான விழா ஒன்றில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் அடங்கிய சிடி (CD) ஒன்றை வெளியிட்டார். வழக்கம்போல இந்த விழாவிலும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், மந்திரிகள், நிறுவனங்கள் என்று யாரும் அழைக்கப்படவில்லை. கலைஞர் கருணாநிதி, அமைச்சர் தயாநிதி மாறன், காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் இருந்தனர்.

சிடியை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் தயாநிதி மாறன், இந்த சிடியின் மூலம் ஆங்கிலமல்லாத பிறமொழிகளில் கம்ப்யூட்டரை இயக்கக் கூடிய புரட்சி ஒன்று வந்துவிட்டது என்று பேசினார். இந்த சிடியை யாரெல்லாம் வேண்டுமென்று கேட்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்கப்படும் என்றார். அதையடுத்து, வரிசையாக மத்திய அரசு என்னென்ன புதுமையான, கம்ப்யூட்டர் தொடர்பான திட்டங்களையெல்லாம் கொண்டுவரப்போகிறது என்று பேசினார். பல்வேறு பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தார்.

அட, நாமும் இந்த சிடியைக் கேட்டு வாங்கி உடனடியாக கம்ப்யூட்டர் ஜோதியில் கலந்துவிடுவோம் என்று நினைப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை.

முதலில் இந்த சிடியில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். இன்று கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினால், உடனேயே அதில் ஆங்கிலத்தில் எழுத முடியும். இண்டெர்நெட் மூலம் உலகில் பல இடங்களில் உள்ள இணையத்தளங்களை (websites) பார்க்க முடியும். ஆனால் இந்த இணையத்தளங்கள் ஆங்கிலத்தில் இருந்தால்தான் எளிதாக, ஒன்றுமே செய்யாமல் பார்க்க முடியும். மற்றவருக்கு மின்னஞ்சல் (e-mail) அனுப்ப முடியும். ஆனால் இங்கும் ஆங்கிலத்தில் அஞ்சல் அனுப்ப வேண்டுமென்றால் பிரச்னை எதுவுமிருக்காது. தமிழிலோ, பிற மொழிகளிலோ என்றால் அவ்வளவு எளிதான காரியமில்லை. இதையெல்லாம்விட பெரிய பிரச்னை கம்ப்யூட்டரைத் திறந்தவுடனேயே என்னென்னவோ ஆங்கிலத்தில் சொல்லி பயமுறுத்தும். கொஞ்சம் விஷயம் தெரியாதவராக இருந்தால் இந்த ஆங்கிலச் சொற்கள் என்ன சொல்ல வருகின்றன என்று புரியாது. "Open" என்றால் எதைத் திறக்க வேண்டும்? வாசல் கதவையா? "Close" என்றால் எதை மூட வேண்டும்? புழுதி படியாமல் இருக்க கம்ப்யூட்டர் மேல் ஒரு கவரைப் போட்டு மூடவேண்டுமா?

ஏதாவது உதவி வேண்டுமென்றால் "Help" என்று இருக்கும் பட்டனை அழுத்தினால் கம்ப்யூட்டர் திரையில் என்னென்னவோ வரும். எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும். அதைப் படித்துப் புரிந்துகொள்வது ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே சற்று கஷ்டமானது!

இந்த சிடியைப் போட்டால் எல்லாம் தமிழில் மாறிவிடுமா என்றால் அதுதான் இல்லை! இந்த சிடியில் நிறைய தமிழ் எழுத்து வடிவங்களை (font) கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் கம்ப்யூட்டரில் நிறுவுவதற்கே நிறைய வேலைகளைச் செய்யவேண்டும். இந்த எழுத்துரு எல்லாவற்றையும் நிறுவிவிட்டாலும் கம்ப்யூட்டர் கீபோர்டில் பட்டன்களை அடித்தால் தமிழ் எழுத்து வருமா? அதுதான் கிடையாது. "இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி, தமிழை உள்ளிடுவதற்கு எந்த சாஃப்ட்வேரும் இல்லை" என்கிறார் சென்னையைச் சேர்ந்த கணினி வல்லுநர் நாராயணன்.

இந்த சிடியில் வேறென்ன இருக்கிறது? இணையத்தளங்களைப் படிக்க உதவும் உலாவி (browser) எனப்படும் ஒரு மென்பொருள் கிடைக்கிறது. இதற்கு ஃபயர்ஃபாக்ஸ் என்று பெயர். இதிலென்ன விசேஷம்? கம்ப்யூட்டர் வாங்கும்போதே அதில் இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் என்ற உலாவி இருக்கிறதே என்று பலரும் கேட்கலாம். ஆனால் இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஆங்கிலத்தில் இருக்கும். File, Edit, View, Go, Print, Cut, Copy, Paste என்று எல்லாம் ஆங்கிலமயமாக இருக்கும். ஆனால் இந்த ஃபயர்ஃபாக்ஸ் என்னும் உலாவி மென்பொருளை நிறுவிவிட்டால் அதில் ஆங்கிலத்தில் வேண்டுமென்றால் ஆங்கிலத்திலும், தமிழில் வேண்டுமென்றால் தமிழிலும் மெனு வருமாறு செய்யலாம். இந்த அருமையான வேலையைச் செய்தவர் இப்பொழுது மலேசியாவில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி நிபுணர் முகுந்தராஜ் என்பவர். இவர்கள் எல்லோரும் ஓப்பன் சோர்ஸ் மூவ்மெண்ட் என்னும் கொள்கையைச் சேர்ந்தவர்கள்.

அதாவது, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை இலவசமாக எல்லோருக்கும் அளிக்க வேண்டும் என்பதற்காகவே வாழ்நாளெல்லாம் உழைத்து மென்பொருட்களை உருவாக்கித் தருபவர்கள். அல்லது நம்மவர்களின் தேவைக்கேற்ப இருக்கிற சா·ப்ட்வேர்களையெல்லாம் மொழி மாற்றியோ, சுலபப்படுத்தியோ அளிப்பவர்கள்.

அப்படிச் சிலர் ஓப்பன் சோர்ஸ் முறைப்படி பயர்ஃபாக்ஸ் என்ற மென்பொருளை உருவாக்கியதால்தான் முகுந்தராஜ் போன்றோர் இந்த மென்பொருளில் தமிழைப் புகுத்த முடிந்தது! ஆனால் அதையும் கூட சி-டாக் தாங்களே செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தைத் தந்திருக்கிறார்கள்." என்கிறார் கணினி மென்பொருள் வல்லுனர் டாக்டர் பத்ரி சேஷாத்ரி.

அதெல்லாம் போகட்டும், இனி தமிழ் உலாவியில் சந்தோஷமாக இணையத்தில் வலம்வரலாம் என்கிறீர்களா? அதுவும் அவ்வளவு எளிதல்ல! இந்த சிடியிலிருந்து இதையெல்லாம் நிறுவ நல்ல கணினி அறிவு தேவை. "இவ்வளவு மென்பொருள்களையும் ஒரு பாமரன் எவ்வாறு மிகக் குறைந்த பட்ச அறிவோடு கம்ப்யூட்டரில் பயன்படுத்தப் போகிறான்? சிக்கல்கள் இங்கிருந்துதான் தொடங்குகின்றன." என்கிறார் நாராயணன்.

"இந்த மென்பொருள்களை கம்ப்யூட்டரில் நிறுவும் போதே பல பிரச்னைகள் வருகின்றன. ஒரு கணிணி விற்பன்னர் அல்லாத ஒரு சாதாரணப் பயனருக்கு, இந்தப் பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அதிகம்." என்கிறார் சென்னையைச் சேர்ந்த வலைப்பதிவாளர் பிரகாஷ். "நான் கேள்விப்பட்ட வரை, இந்தச் செயலிகளை உபயோகிப்பதில் இருக்கும் சிக்கல்களால், 'அய்யோ, கணிணியிலே தமிழா? வேண்டாஞ்சாமி' என்று ஓடிவிடுவார்கள் என்று தான் தோன்றுகிறது." என்கிறார் பிரகாஷ்.

ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தின் கொள்கைப்படி யார் வேண்டுமானாலும் ஒரு திறமூல மென்பொருளை இன்னொருவருக்குத் தரமுடியும். ஆனால் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கொடுத்திருக்கும் சிடியில் உள்ள பல எழுத்து வடிவங்களும் தனியார் கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டவை. இந்த எழுத்து வடிவங்கள் திறமூல முறைப்படி விநியோகிக்கப்பட்வில்லை. "இந்த வடிவங்களை மறுவிநியோகம் செய்யும் உரிமையைப் பற்றிய தெளிவு இல்லை. இதுவும் இவற்றின் பரவலான பயன்பாட்டுக்கு எதிரான ஒன்று." என்கிறார் இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம் (www.thamizmanam.com) என்னும் தளத்தின் நிறுவனர் காசி ஆறுமுகம்.

அதாவது, இந்த சிடியில் உள்ள ·பாண்ட்களை பத்திரிக்கைகள் இனி நன்றாகப் பயன்படுத்தலாம் என்று விழவில் தயாநிதி மாறன் சொன்னார் அல்லவா? அது பொய்! ·பாண்ட்களைத் திறந்து பார்த்தால், அந்தமாதிரி வர்த்தகச் செயல்பாடுகளுக்கு அனுமதி ( லைசென்ஸ்) பெறவேண்டுமென்றும், அப்படி லைசென்ஸ் பெறுவதற்கு இன்னாரை அணுகவேண்டும் என்றும் எழுதியிருக்கிறது.

எழுத்து வடிவங்களைப் பற்றிப் பேசும்போது இந்த சிடியின் மற்றுமொரு குறைபாடு வெளிவருகிறது. "இப்போது வெளியிடப்பட்டிருக்கும் பேக்கேஜில் மூன்றுவிதமான என்கோடிங் வகைகளிலும் (TAM, TAB, Unicode) எழுத்துவடிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அப்படியானால் தொடர்ந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு வடிவத்தில் எழுவதை எப்படி இந்த வெளியீடு தடுக்கப்போகிறது?" என்ற கேள்வியை எழுப்புகிறார் காசி ஆறுமுகம். தமிழுக்கே உள்ள ஒரு கேடு கம்ப்யூட்டரில் தமிழுக்கென பல்வேறு என்கோடிங் (எழுத்துக் குறியீடு) இருப்பதாகும். அதில் தமிழக அரசு அதிகாரபூர்வமாக ஏற்றிருக்கும் TAM, TAB என்பது இரண்டு. ஆனால் உலகம் முழுவதிலும் அனைவரும் ஏற்றுக்கொள்வது யூனிகோட் எனப்படும் என்கோடிங். மத்திய அரசு எந்த என்கோடிங்கைத் தரப்படுத்தப்போகிறது? அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பும் தேவை. மத்திய அரசு அதில் கவனமே செலுத்தவில்லை என்று தோன்றுகிறது. "உலகம் யூனிகோடாடில் ஒரே கோடாகப் பயணம் செய்யும்போது, கொடுக்கப்பட்ட மென்பொருள்களில் எத்தனை மென்பொருள்கள் யூனிகோடினை ஒட்டி எழுதப்பட்டிருக்கிறது என்பது பெரிய கேள்விக்குறி." என்கிறார் நாராயணன்.

இந்த சிடியில் உள்ள திறமூல மென்பொருள்கள் - ஃபயர்ஃபாக்ஸ், ஓப்பன் ஆஃபீஸ் எனப்படும் அலுவல் செயலி, கொலும்பா எனப்படும் மின்னஞ்சல் செயலி - ஆகியவை தவிர்த்து சில மென்பொருள்கள் இலவசமாகத் தரப்பட்டுள்ளன. ஒன்று தமிழ்-ஆங்கிலம் அகராதி. மற்றொன்று Optical Character Recognition (OCR) எனப்படும் மென்பொருள். இந்த மென்பொருள் தாளில் அச்சிட்டப்பட்டிருக்கும் எழுத்துகளை ஒரு ஸ்கேனர் மூலம் படித்து எழுத்துகளாக மாற்றும் மென்பொருள். இவை இரண்டுமே யூனிகோட் எனப்படும் உலக எழுத்துக் குறியீட்டுத் தரத்தில் இயங்காதவை.அதாவது தமிழ் கம்ப்யூட்டர்வாசிகளுக்கு உபயோகமில்லாதவை

இந்த OCR மென்பொருள் தொடர்பாக மற்றுமொரு விவாதமும் எழுந்துள்ளது. "அமைச்சர் தயாநிதி மாறன், இந்த மென்பொருளை உருவாக்கியதில் தனக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது என்பது போல பல பேட்டிகளில் பேசிவருகிறார். ஆனால் உண்மையில் இந்த மென்பொருள் தமிழக அரசின் நிதி உதவியின் மூலம் 2002-ம் ஆண்டிலேயே சென்னையைச் சேர்ந்த ஒரு கணினி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதை தாங்களே செய்ததாகவும், 2005-ல் தான் நாட்டுக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறுவது சரியல்ல." என்கிறார் பத்ரி சேஷாத்ரி."

அமைச்சர் தயாநிதி மாறன், OCR நுட்பத்தினை தமிழ்மொழியோடு சேர்த்து 22 இந்திய மொழிகளில் விரைவில் வரவிருக்கிறது என்று ஒரு பத்திரிகை நேர்காணலில் கூறியிருக்கிறார். முதலில், இவ்வளவு இந்திய மொழிகளிலும் இயங்கும் அந்தந்த மொழியாளர்கள், மென்பொருள் நிபுணர்களின் துணை கோரப்பட்டதா என்றுதெரியவில்லை. இதைச் செய்வதற்கான செயல்திட்டம் எதுவும் சீ-டாக் இணையத்தளத்தில் இல்லை. எவ்விதமான முன்வரைவுகளுமில்லாமல் இதை எவ்வாறு செய்து முடிக்கமுடியும் என்று தெரியவில்லை. இதுவரை பிறமொழிகளில் (ஹிந்தி தவிர்த்து) எவ்விதமான மென்பொருளோ, நிரலியோ அல்லது எழுத்து வடிவமோ கூட சீ-டாக்கின் இணையத்தளத்தில் இல்லை. அவ்வாறிருக்கையில், 22 இந்திய மொழிகளிலும் ஒரு நுட்பம் வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது நம்பிக்கையை வரவழைக்கவில்லை" என்கிறார் நாராயணன்.

அமைச்சர் தயாநிதி மாறன் இதற்கும் மேலே சென்று, அடுத்த ஆறு மாதங்களில் கையால் எழுதியதையும் OCR மூலம் எழுத்துகளாக மாற்றும் மென்பொருளைத் தயாரித்துக் கொடுப்போம், வாயால் பேசுவதை கணினியே எழுத்துகளாக மாற்றச் செய்வோம், ஆங்கிலத்தில் உள்ளவற்றை தானாகவே தமிழில் மொழிபெயர்க்கச் செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார். இவையெல்லாம் "ஆழமில்லாமல் மேம்போக்காக ஒரு தேர்தல் கூட்டத்தில் சொல்லப்படும் வாக்குறுதிகளைப் போல அள்ளிவீசப்பட்டிருக்கின்றன. இவை ஆங்கிலத்திலேயே இன்னமும் முழு வெற்றியடையாத நிலையில், தமிழில் போக வேண்டிய தூரம் எத்தனையோ. அமைச்சர் சொல்வதுபோல இவையெல்லாம் ஆறுமாதத்தில் ஆகிவிடும் என்பது மிகவும் மேம்போக்கான கூற்று." என்கிறார் காசி ஆறுமுகம்.

முடிவாக, "இந்த மென்பொருள் குறுந்தகடு உபயோகமில்லாமலில்லை. ஆனால், அஸ்திவாரமில்லாமல் கட்டிய வீட்டினைப் போலத்தான் இருக்கிறது. இதன் உபயோகங்களைத் தாண்டி, பலவீனங்களே பெருமளவில் வெளிப்படுகிறது." என்கிறார் நாராயணன்.

Comments

மிக அழ்காக தொகுக்கப்பட்ட கட்டுரை. நிச்சயமாக, சரியான பாதையில் செல்ல் எடுத்து வைக்கப்பட்ட முதல் அடி இந்த ரிப்போர்ட்டர் கட்டுரை.
பத்திரிக்கையில பார்த்தேன் தலைவா. நீங்க மட்டும் புகைப்படத்துல ரொம்ப சீரியஸா பார்த்துக்கிட்டு நிக்கறீங்களே..!! சரி, அதை விடுங்க. சூப்பர் மேட்டர். விவாதிக்கப்பட்ட அனைத்து வி்ஷயங்களும் அழகாக வெளிவந்திருந்தது.
the person who had written this had not understood the issues.nor he or she was not informed about the issues in depth.There are factual errors in the article.the writer has no idea about open source or free software.nor seems to be aware of the controversies relating to claims and counter claims on making firefox available in tamil.and the impression that anything that is not unicode compatible is useless is wrong but that is what this article creates.why cant they write a balanced article without factual errors.why some facts are delibarately left out.
if the intention is to project one person as a saviour please spend money and take an ad.that is a sensible and honest way of doing it.
i have problems with the way the ministry has handled this and with
the claims made by dhayanithi maran.but this article gives an unbalanced and distorted perspective.CDAC has been involved in indian languages computing for many years.it has a history and they are involved in other areas also.you cannot brush aside that.

the readers will get confused and may curse maran.¨many may be reluctant to try this CD.is that what you want.
the irony is kumudam is not using unicode and one has to download font to read what is in their publications.someone should have pointed out this also before condemning anything that is not unicode as useless.but then here the intention is to politicise the issue and project maran in bad light than to contribute to any meaningful debate on tamil computing.the article does not even lists what all is available in the CD.
ஜெக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை.
மிகவும் அவநம்பிக்கையான தொனியுடன் இந்தக் கட்டுரை அமைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

கணியில் தமிழில் எழுத ஆவல் இருந்தும் இதுவரை முயற்சிக்காத ஒருவர் அல்லது வழிவகை தெரியாத ஒருவர், மத்திய அரசின் இந்த அலட்டல் விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாவது தமிழில் எழுதலாம் என்று முனைகிறவரை சோர்வடையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது இக்கட்டுரை. நான் கணியில் பழகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மடற்குழுக்களின் மூலம் கணியில் தமிழில் எழுதலாம் என்று அறிந்து மிகுந்த சிரமத்திற்கிடையில் முட்டி மோதி (நண்பர்களின் உதவியுடன்) முயன்று ஒரு வலைப்பதிவு எழுதுமளவிற்கு இன்று தேர்ச்சி பெற்றுள்ளேன்.

ஆக.... தமிழில் எழுத ஆர்வமுள்ளவன், தொழில்நுட்ப அறிவு இல்லையென்றாலும், இந்த மென்பொருட்கள் மூலம் முட்டி மோதியாவது கணியில் தமிழில் எழுத கற்றுக் கொள்வான் என்று யூகிக்கிறேன். இதன் மூலம் கணியில் தமிழில் புழங்குவோரின் எண்ணிக்கை அதிகமாகப் போவதில் சந்தோஷமடைந்திருக்கும் எனக்கு இக்கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. இந்த மென்பொருட்களின் உருவாக்குவதில் முனைந்தவர்களுக்கு அவர்கள் பெயர்கள் மறைக்கப்பட்டிருப்பது முறையற்றதுதான் என்றாலும் அவர்களின் நோக்கமும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில்தான் இருக்கும் என நம்புகிறேன். அந்த நோக்கத்தை இந்தக் கட்டுரை பின்னடையச் செய்கிறதோ என்று அஞ்சுகிறேன். இனிவரும் கட்டுரைகளில் இது நேராமலிருந்தால் நன்றாக இருக்கும்.
Alex Pandian said…
வீட்டுக்கு ஆட்டோ வராம பாத்துக்குங்க :-) கட்டுரை மிகவும் கடுமையான தொனியிலும் எள்ளல் மாதிரியும் உள்ளது. தவறுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இத்தனை வருடங்களாக எப்படி தமிழ் இணையத்தில் வளர்ந்துள்ளது, யார் யார் இலவச செயலிகள், எழுத்துருக்கள் உருவாக்கியுள்ளனர் என்ற பட்டியலும் வெளியிட்டிருந்தால் அவர்களுக்கும் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கும்.
ENNAR said…
நான் மேற்படி சாப்ட்வேரை நிருவிவிட்டேன் ஆனால் page set up தான் செய்ய முடியவில்லை அதற்க சென்றால் window close ஆகிவிடுகிறது
என்னார்

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்